வெடிக்கு பதில் செடி: மாற்றி யோசித்து பசுமை தீபாவளி கொண்டாடிய இளைஞர்கள்!


வத்தலகுண்டு அருகே விருவீடு கிராமத்தில் வெடிக்கு பதில் செடி என மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி தீபாவளியை கொண்டாடிய இளைஞர்கள்.

திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே வெடிக்கு பதில் செடி, வெடி பந்துக்கு பதில் விதை பந்து என தீபாவளி கொண்டாட்டத்தை மாற்றி யோசித்து பசுமை தீபாவளியை இளைஞர்கள் கொண்டாடியது அனைவரையும் கவர்ந்தது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே விருவீடு பகுதியைச் சேர்ந்த கிராமத்து இளைஞர்கள் தீபாவளி நாள் அன்று பட்டாசுகளை வெடிக்காமல் வெடிக்கு பதில் செடியை மக்களுக்கு வழங்கினர். தொடர்ந்து விதை பந்துகளையும் வழங்கி வீசச் செய்து தீபாவளியை வித்தியாசமாக கொண்டாடினர். வைகை பாரம்பரிய இயக்க ஒருங்கிணைப்பாளர் அருண் பாண்டியன் மற்றும் இளைஞர்கள் நம்மாழ்வாரின் இயற்கை முறை விவசாயம் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மாசில்லா தீபாவளியை கொண்டாட முடிவு செய்தனர்.

வழக்கமாக வெடிகளை கொண்டு தீபாவளி கொண்டாட்டத்தை தவிர்த்து மாற்றி யோசித்து செடிகளுடன் தீபாவளியை கொண்டாடினர். வெடிக்கு பதில் செடி, வெடிக்கு பதில் விதைப் பந்து வீசுவது என்ற சிந்தனையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தீபாவளி நாளன்று விருவீடு பகுதியில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர். மேலும் தரிசு நிலப் பகுதிகளுக்கு சென்று விதை பந்துகளை சிறுவர்கள், இளைஞர்களை வீசச் செய்தனர்.

வத்தலகுண்டு அருகே விருவீடு கிராமத்தில் பசுமை தீபாவளி கொண்டாடும் விதமாக வெடிக்கு பதில் விதைப் பந்துகளை தரிசு நிலங்களில் வீசிய இளைஞர்கள்.

தங்கள் கிராமத்தில் மாசில்லாத தூய்மையான காற்றை உருவாக்கித் தர வேண்டும் என்பது தங்கள் நோக்கம் என்று கூறுகின்றனர். இந்த முயற்சியில் ஈடுபட்ட இளைஞர்கள். இளைஞர்களின் நோக்கத்தையும், அவர்கள் கொண்டாடிய பசுமை தீபாவளியையும் கிராம மக்கள் மட்டுமின்றி அனைவரும் பாராட்டினர்.

x