தீபாவளி சிறப்பு விற்பனை: மதுரை சிறை அங்காடியில் நவதானிய காரம், இனிப்பு வகைகள் அறிமுகம்


காரம், இனிப்புகளை வாங்கிய மக்கள்.

மதுரை: மதுரை சிறை அங்காடியில் நவதானிய காரம், இனிப்பு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தீபாவளி சிறப்பு விற்பனையை டிஐஜி பழனி தொடங்கி வைத்தார்.

மதுரை மத்திய சிறையில் இருக்கும் சிறைவாசிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் சிறை அங்காடி செயல்பட்டு வருகிறது. சிறைச்சாலைக்கு முன் பகுதியில் இருக்கும் இந்த கடையில், 1,500-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் தயாரிக்கும் துணிகள், செக்கு எண்ணெய், காலணி, மரப் பொருட்கள் மற்றும் இனிப்பு, கார வகைகள் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளன. இந்த கடையில், இந்த ஆண்டுக்கான தீபாவளி விற்பனையை சிறைத்துறை டிஐஜி பழனி நேற்று தொடங்கி வைத்தார்.

மதுரை சிறை அங்காடியில் பக்கெட் பலகார விற்பனையை
டிஐஜி பழனி தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து சிறைத் துறையினர் கூறியதாவது: இந்த ஆண்டு பக்கெட் பலகாரம், நவதானிய கார வகைகள், புதிய இனிப்பு வகைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம். ஒன்றரை கிலோ பக்கெட் பலகாரம் ரூ.499-க்கு விற்கப்படுகிறது. சுய உதவிக்குழு பயிற்சியின் மூலம் பெண் சிறைவாசிகள் தயாரித்த சிறுதானிய, நவதானிய சீவல், கார வகைகள் கிலோ ரூ.300-க்கு விற்கப்படுகிறது.

இதுதவிர, பிற இனிப்பு, கார வகைகளும் விற்கப்படுகின்றன. 1 கிலோ இனிப்பு ரூ.350-க்கும், கார வகைகள் ரூ.240-க்கும் விற்பனை செய் கிறோம். இம்முறை 5 ஆயிரம் கிலோ இனிப்பு, கார வகைகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதேபோல், ரூ.4 லட்சம் மதிப்பிலான துணிகள், 2 ஆயிரம் லிட்டர் எண்ணெய், ரூ.3 லட்சம் மதிப்பிலான மரப்பொருட்கள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி சீசனில் மொத்தம் ரூ.50 லட்சம் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் நிதியின் மூலம் ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் குடும்பங்களுக்கு உதவி வருகிறோம் என்று கூறினர்.

x