வேடசந்தூர்: வடமதுரை அருகே செங்குளத் துப்பட்டியில் காளான் பறிக்கச் சென்ற சிறுவனுக்கு 2 கிலோ எடையுள்ள மெகா காளான் கிடைத்தது. இதை கிராம மக்கள் வியப்புடன் பார்த்தனர். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே செங்குளத்துப் பட்டியைச் சேர்ந்த சுந்தரம் மகன் கவின்.
வடமதுரையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக வடமதுரை பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அப்பகுதி சிறுவர்கள் காலையில் காளான்கள் பறிக்கச்செல்வது வழக்கம்.
அவர்களுக்கு சிறிய காளான்கள் கிடைக்கும். அவற்றை பறித்துக் கொண்டு சென்று வீட்டில் சமைத்துச் சாப்பிடுவர். நேற்று விடுமுறை தினம் என்பதால் காலையிலேயே சிறுவர்கள் சிலர் காளான் பறிக்கச் சென்றனர்.
சிறுவன் கவின் புதர்கள் அடங்கிய பகுதியில் பார்த்தபோது பெரிய அளவிலான காளான் ஒன்று இருந்தது. இதைப் பறித்து வீட்டுக்குக் கொண்டு சென்றார். வழக்கத்துக்கு மாறாக பெரிய அளவில் காளானை சிறுவன் எடுத்துச் செல்வதை கிராம மக்கள் வியந்து பார்த்தனர்.
இந்த காளானை எடை பார்த்ததில் 2.25 கிலோ கிராம் இருந்தது. இயற்கையாகவே முளைத்த வெள்ளை காளான் உணவுக்கு உகந்தது என்பதால் சிறுவனின் குடும்பத்தினர் மெகா எடை கொண்ட காளானை சமைத் துச் சாப்பிட்டனர்.