மதுரையில் சூடுபிடித்த தீபாவளி விற்பனை பஜார் - 340 கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் காவல் துறை


படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: தீபாவளிக்கு இன்னும் 5 நாளே இருப்பதால் மதுரையில் தீபாவளி விற்பனை பஜார் சூடுபிடித்துள்ளது. 340 கேமராக்கள் மூலம் கூட்டத்தை பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டு வந்து போலீஸார் கண்காணிக்கின்றனர்.

இந்நாண்டுக்கான தீபாவளி கொண்டாடத்திற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், மதுரையில் தீபாவளி பஜார் சூடுபிடித்துள்ளது. புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க விளக்குத்தூண், மாசி வீதிகளில் மக்கள் குவிக்கின்றனர். பகல் நேரத்தைவிட, மாலை நேரத்தில் இரு மடங்கிற்கு மேல் கூடுகின்றனர். மாசி வீதிகள், விளக்குத்தூண், கீழ வாசல், காமராஜர் சாலை, அம்மன் சன்னதி பகுதிகளிலுள்ள சிறிய, பெரிய ஜவுளிக் கடைகளில் மக்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்று புதிய ரக ரக ஆடைகளை வாங்கினர்.

பிளாட் பார கடைகளில் சில பொருட்கள் கூவி, கூவி விற்கப்படுகின்றனர். தீபாவளி நெருங்க, நெருங்க விளக்குத்தூண், மாசி வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர காவல்துறை செய்துள்ளது. மக்கள் நலன் கருதி விளக்குத்தூண் சந்திப்பில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறையை காவல் ஆணையர் லோகநாதன் திறந்து வைத்து, பாதுகாப்பு குறித்து, பல்வேறு ஆலோசனைகளை கூறினார்.

பாதுகாப்பு குறித்து காவல்துறையினர் கூறியது; "தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறையின் மூலம் கீழமாசி வீதி லெமன் மார்க்கெட்டில் இருந்து விளக்குத்தூண் சந்திப்பு, தெற்கு மாசி வீதி, கீழ ஆவணி மூலவீதி வரையிலுள்ள பகுதிகளில் 18 நவீன கேமராக்கள் பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

கீழமாசி வீதி, விளக்குத்தூண் சந்திப்பில் இருந்து தெற்கு மாசி வீதி வரையிலும் தமிழக அரசு சார்ந்த 24 சிசிடிவி கேமராக்களும், தீபாவளிக்கு என பிரத்யேகமாக 88 கூடுதல் சிசிடிவிகளும், தனியார் நிறுவனங்கள் சார்ந்த 208 சிசிடிவிக்கள் என மொத்தம் 338 கேமராக்கள் 4 மாசி வீதிகளிலும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. குறிப்பாக கீழமாசி வீதி, விளக்குத்தூண் சந்திப்பில் இருந்து மறவர் சாவடி வரை கிழக்கு, மேற்கு நோக்கி காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். புதிதாக 18 காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இம்முறையில் தேவர் ஜெயந்தி விழாவுக்கு அடுத்த நாள் (அக்.31) தீபாவளி வருவதால், தீபாவளி பஜார் பாதுகாப்புக்கு என சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் தனியாக சுழற்சி முறையில் பணியில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருட்டு போன்ற குற்றச்செயல்கள் நடக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் உடைமைகளை பாதுகாப்புடன் வைக்க, அவ்வப்போது மைக் மூலம் அறிவுறுத்தப் படுகிறது." என்றனர்.

x