விழுப்புரம்: செஞ்சி அருகே பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு


கப்பை பாறை ஓவியங்களில் இடம்பெற்றுள்ள கை. (அடுத்தப்படம்) கப்பை பாறை ஓவியங்களில் இடம்பெற்றுள்ள மனித உருவம்.

விழுப்புரம்: செஞ்சி அருகே உள்ள கப்பை கிராமத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கோ.செங்குட்டுவன், செஞ்சி நூலகர் பூவழகன் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது பழமையான பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டன.

இதுகுறித்து கோ.செங்குட்டுவன் கூறியதாவது: "கப்பை கிராமத்திலுள்ள மலைப் பகுதியில் ஆய்வு செய்தபோது இதில் அமைந்துள்ள குகைத் தளத்தில் தொல் பழங்கால ஓவியங்கள் இருப்பது கண்டறியப்பட்டன. மனிதன் மற்றும் விலங்கின உருவங்கள் உள்ளிட்டவை இதில் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலான ஓவியங்கள் வெள்ளை வண்ணத்தில் வரையப்பட்டுள்ளன. சிவப்பு நிறத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் ஆங்காங்கே மங்கலாகத் தெரிகின்றன. அதில், ஒரு மனிதன் தனது இரண்டு கைகளையும் தூக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஓவியம் சிறப்பானது.

மேலும், இந்த ஓவியத் தொகுப்பில் காவி நிறத்தில் இடம்பெற்றுள்ள கை ஓவியம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளில் காணப்படும் இத்தகைய ஓவியம் தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகே ஆலம்பாடி பாறை ஓவியங்களில் இடம்பெற்றுள்ளது. அதற்கடுத்த நிலையில் இங்கு கண்டறியப்பட்டுள்ளது.

கப்பை கிராமத்தில் உள்ள பாறை ஓவியங்கள் பழமைவாய்ந்தவை. அக்கால மக்களின் வாழ்வியல், பண்பாட்டை நமக்குச் சொல்பவை. இங்குள்ள பெரும்பாலான ஓவியங்கள் மங்கி மறைந்து போய்விட்டன. எஞ்சி இருக்கும் ஓவியங்களைப் பாதுகாக்க விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும் தொல்லியல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.

x