குன்னூர்: குன்னூரில் குட்டியுடன் சிறுத்தை உலா வந்ததாக வந்த தகவலின் பேரில் வனத்துறையினர் ஆய்வு செய்தபோது அவை காட்டுப் பூனைகள் என தெரியவந்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் பொதுமக்கள் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து நாய், கோழி, ஆடு, உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடிச் செல்கின்றன. இந்நிலையில் குன்னூர் கண்டோன்மென்ட் பகுதிக்கு உட்பட்ட சப்ளை டிப்போ அருகே லேக் சாலையில் சிறுத்தை ஓய்வெடுத்துச் சென்றது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை வந்து சென்றதை உறுதி செய்தனர்.
பின்பு, அப்பகுதியில் கேமராக்களைப் பொருத்தி கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், இதே இடத்தில் இன்று நான்கு குட்டிகளுடன் சிறுத்தை நடமாடுவதாக வனத்துறைக்கு மீண்டும் தகவல் வந்தது. உடனே அங்கு வந்த வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பைனாகுலோர் உதவியுடன் அப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டத்தைக் கண்காணித்தனர்.
அப்படிக் கண்காணித்ததில் அந்த இடத்தில் குட்டியுடன் இருந்தது சிறுத்தை இல்லை எனவும் அவை காட்டு பூனைகள் எனவும் தெரியவந்தது. இதையடுத்து மக்கள் நிம்மதி அடைந்தனர். மேலும், இந்த பகுதியில் சிறுத்தைகள் வந்தால் வனத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என மீண்டும் அப்பகுதி குடியிருப்பவாசிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்திச் சென்றனர்.