டானா புயல்: பாம்பன் உள்ளிட்ட தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்


பாம்பனில் ஏற்றபட்டுள்ள ஒன்றாம் எண் புயல் கூண்டு.

ராமேசுவரம்: வங்கக் கடலில் உருவாகவுள்ள டானா புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருந்தது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து, நாளை இது 'டானா' புயலாக உருவெடுக்க உள்ளது.

அதன்பிறகு, தீவிர புயல் சின்னமாக மாறி, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற அக்.25ம் தேதி அதிகாலை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒடிசா பூரி - சாகர் தீவு இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் இன்று தமிழகத்தின் பாம்பன், தூத்துக்குடி, குளச்சல், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், புதுச்சேரி, காட்டுப் பள்ளி, சென்னை, எண்ணூர் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேலும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகள், பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் அதிகப்பட்சமாக 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீன்வளத் துறையினர் மறு அறிவிப்பு வரும் வரையிலும் தமிழக மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

x