நீர்வரத்து சீரானதால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!


சுருளி அருவியில் ஏற்பட்டுள்ள சீரான நீர்வரத்து.

கம்பம்: நீர்வரத்து சீரானதை அடுத்து சுருளி அருவியில் இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறைவான அளவிலேயே சுற்றுலாப் பயணிகளின் வருகை இருந்தது.

கம்பம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. இங்குள்ள கைலாசநாதர் குகை, பூதநாரயணன் கோயில், ஆதி அண்ணாமலையார் கோயில், வேலப்பர் கோயில், சுருளிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில், கன்னிமார் கோயில் புகழ் பெற்றவை. இதனால் சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் சுருளி அருவிக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர். சுருளி அருவியைப் பொறுத்தளவில் நீர்வரத்துக்கு ஏற்ப குளிக்க அனுமதிக்கப்படுவது வழக்கம்.

மேகமலையில் உள்ள ஹைவேவிஸ் தூவானம் அணை நீரும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் சுருளி அருவியின் நீராதாரமாக உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மேகமலை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் அருவியில் நீர்வரத்து சீரானதை அடுத்து இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவிக்குச் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளனர்.

இது குறித்து கம்பம் கிழக்கு வனத்துறையினர் கூறுகையில், "சமீப காலமாக இப்பகுதியில் திடீர் திடீரென மழை பெய்கிறது. இதனால் வெள்ளம் ஏற்படுவதும், பின்பு சீராவதுமாக உள்ளது. அருவிக்கு வரும் நீரின் தன்மையைப் பொறுத்தே சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப் படுகிறது. இன்று நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது" என்றனர்.

தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. அங்கு செல்லும் பலரும் சுருளி அருவிக்கு வருவது வழக்கம். அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதால் அவ்வப்போது அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பலரும் சுருளிக்கு வருவதை குறைத்துள்ளனர். இந்நிலையில், இன்று திடீரென அனுமதி அளிக்கப்பட்டது. என்ற போதும் ஐயப்ப பக்தர்களின் வருகை குறைவாகவே இருந்தது. உள் மாவட்ட சுற்றுலாப் பயணிகளே குளித்து மகிழ்ந்தனர்.

x