‘நெகிழி விழிப்புணர்வு’ திருமண அழைப்பிதழ் - வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டு!


திருச்சி: சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களால் உலகம் முழுவதுமே பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நன்னீர் நிலைகளில் தொடங்கி கடல் வரை இந்தப் பிளாஸ்டிக் கழிவுகளின் சேகரத்தால் பல தலைமுறைகளுக்கான கேடுகளை சேர்த்து வைத்திருக்கிறோம்.

ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறிவதில் தொடங்கி, இதர பிளாஸ்டிக் பொருட்கள் வரை பிளாஸ்டிக் அரக்கனில் பேதம் கிடையாது. படிப்படியாக எல்லா பிளாஸ்டிக் பயன்பாடுகளுக்கும் முடிவுகட்டுவதும், அதற்கான ஆய்வுகளில் ஈடுபடுவதும் தற்போதைய சூழலில் அவசியமாகிறது.

இதற்காக ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும், பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாதால், பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுவதுமாக ஒழிக்க இயலவில்லை. இதையடுத்து, பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை பயன்படுத்தும் விதமாக, ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற மக்கள் இயக்கத்தை தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.

இந்த திட்டத்தில், அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் தவிர்க்கப்படுவதுடன், அதற்கு மாற்றாக துணிபோன்ற சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இருந்தாலும், அதற்கான கட்டுப்பாடுகளோ, பொதுமக்களுக்கு போதியளவில் விழிப்புணர்வோ இல்லாததால், பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுவதுமாக ஒழிக்க முடியவில்லை.

இந்நிலையில், பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்துவதை வலியுறுத்தி, திருச்சியில் வரும் 20-ம் தேதி நடைபெறும் திருமணத்துக்கான அழைப்பிதழை, திருமண வீட்டார் துணிப்பையில் அச்சிட்டு விநியோகித்து வருகின்றனர். இது பலரது வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

இதுகுறித்து திருச்சி தண்ணீர் அமைப்பின் நிர்வாகி நீலமேகம் கூறும்போது, ‘‘பல ரூபாய் செலவு செய்து திருமண அழைப்பிதழ் அச்சிட்டு வீடுதோறும் கொடுத்தால், திருமணம் முடிந்த பின் குப்பைத்தொட்டிக்குத் தான் செல்லும், ஆனால், இதுபோல துணிப்பை கொடுத்தால் நீண்ட நாட்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். துணிப்பையை பயன்படுத்துவது குறித்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திருமண வீட்டாருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார்.

x