ஸ்ரீவில்லி. கூட்டுறவு நூற்பாலையை இயக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?


ஸ்ரீவில்லிபுத்தூரில் கைத்தறியில் அரசின் இலவச சேலையை நெய்த பெண் நெசவாளி.

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நூல் தட்டுப் பாட்டால் ஸ்பின்னிங் மில்கள் மற்றும் பெடல் தறி, கைத்தறி கூடங்கள் மூடப்பட்டதால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்து வரும் நிலையில் கூட்டுறவு நூற்பாலையை செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் 1962-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜரால் கூட்டுறவு நூற்பாலை தொடங்கப்பட்டது. இந்த நூற்பாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

இந்த நூற்பாலையில் நூற்கப்படும் நூல்கள் விருதுநகர் மட்டுமின்றி பல்வேறு மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பப் பட்டு நெசவாளர்களுக்கு மலிவு விலையில் விநியோகிக்கப்பட்டு வந்தது. இதனால் பல ஆயிரம் குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றதுடன், நெசவாளர்களுக்கு தட்டுப் பாடின்றி நூல்கள் கிடைத்து வந்தன.

மேலும் இந்த நூற்பாலையில் இயங்கிய சாயப்பட்டறையில் தனியார் விசைத்தறி வைத்திருப்பவர்கள் குறைந்த விலையில் நூல்களுக்கு சாயம் பிடித்து வந்தனர். இந்த கூட்டுறவு நூற்பாலை ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் லாபம் ஈட்டி வந்தது. இந்நிலையில் நிர்வாகச் சீர்கேடு காரணமாக நூற்பாலையில் நஷ்டம் ஏற்பட்டு நிதி நெருக்கடி காரணமாக 2003-ம் ஆண்டு நூற்பாலை மூடப்பட்டது.

இதனால் இந்த நூற்பாலையை நம்பி இருந்த பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு பிற மாவட்டங்களில் உள்ள நூற்பாலைகளில் இருந்து நூல் கொண்டுவரும் சூழல் ஏற்பட்டது. இதனால் நெசவாளர்கள் அதிக விலை கொடுத்து தனியாரிடம் நூல் வாங்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நூற்பாலை பல ஆண்டுகளாக மூடி கிடப்பதால், நூற்பாலை யில் உள்ள பல லட்ச ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் முற்றிலும் சேதமடைந்து விட்டன. 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட நூற்பாலை முழுவதும் புதர்மண்டி பயன் பாடின்றி உள்ளது.

வில்லிபுத்தூரில் மூடப்பட்ட கூட்டுறவு நூற்பாலை.

ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜ பாளையம், சத்திரப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நெசவுத் தொழிலே பிரதானமாக உள்ளது. ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை மற்றும் சீருடை துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தனியார் கைத்தறி மற்றும் விசைத்தறி களில் பட்டுச் சேலை, காட்டன் சேலை, வேட்டி, துண்டு உள்ளிட்ட ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பல ஆயிரம் மக்கள் வேலை வாய்ப்பு பெறுவதுடன், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடிசை தொழிலாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமீபகாலமாக நூல் விலையேற்றம், தட்டுப்பாடு போன்ற காரணங்களால் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளை யம் பகுதிகளில் நெசவுத்தொழில் நலி வடைந்துள்ளது. நூல் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட ஸ்பின்னிங் மில்கள் மூடப்பட்டுள்ளதால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் வேலை இழந்து உள்ளனர்.

இந்நிலையில் பி.எம்.மித்ரா திட்டத்தில் விருதுநகர் அருகே ரூ.2 ஆயிரம் கோடியில் மெகா ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது தென் மாவட்ட நெசவாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெசவுத் தொழிலை காப்பாற்றும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூட்டுறவு நூற்பாலையை செயல்பாட்டுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த நெசவாளர் ராஜகாளி கூறுகையில், ‘ நாட்டிலேயே முதல் முறையாக விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பல ஆயிரம் தொழி லாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, நெசவுத் தொழிலின் ஆதாரமாக இருந்த கூட்டுறவு நூற்பாலையை தமிழக அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வர முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும். நெச வாளர்களுக்கு தட்டுப்பாடின்றி நூல் கிடைக்கவும், பல தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெறும் வகையில் அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து கூட்டுறவு நூற்பாலையை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

x