காசிக்கு இணையான திருக்காஞ்சி; சங்கராபரணி ஆற்று நீர் கழிவுநீரான அவலம்!


காசிக்கு இணையான திருக்காஞ்சியில், சங்கராபரணி ஆற்றுநீர் கழிவுநீராகி தேங்கிப் போய் கிடக்கிறது. முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதற்காக இங்கு வருவோர் முகம் சுழிக்கும் வகையில் உள்ளது.

புதுச்சேரி திருக்காஞ்சியில்  கங்கை வராக நதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வில்லியனூர் அருகே உள்ளது. சங்கராபரணி நதியே இந்தக் கோயிலின் முக்கிய தீர்த்தமாகும்.  கங்கை வராக நதீஸ்வரரின் லிங்கம் பதினாறு பட்டைகளைக் கொண்ட ஷோடசலிங்கம். இந்த லிங்கத்தை வணங்கினால் முன்னோர் சாபம் நீங்கும் என்பது நம்பிக்கை.

சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கத்தை அகஸ்திய மாமுனிவர் தனது திருக்கரத்தால் இங்கு பிரதிஷ்டை செய்ததாக கோயிலின் தல புராணம் கூறுகிறது. அத்துடன், திருக்காஞ்சியில் உள்ள சங்கராபரணி ஆற்றங்கரையில் காசியில் செய்யும் பித்ரு கர்மங்களை இங்கே செய்யலாம்.

ராமர் இலங்கை செல்லும்போது இங்கு வந்து நீராடி, முன்னோருக்கு தர்ப்பணம் தந்து. ஈசனை வழிபட்டுள்ளார் என்று பெரியோர் கூறுகின்றனர். பித்ரு கடன்களைத் தம்பதி சமேதராக இங்கு நிறைவேற்ற இயலும் என்பதால், அகத்திய பெருமான் தன் தேவி லோப முத்திரை சமேதராக இங்கு காட்சியளிப்பதும் சிறப்பு.

சங்கராபரணி ஆறு புதுச்சேரி அருகே கிழக்காக திரும்பிக் கடலை நோக்கிச் செல்லும்போது, திருக்காஞ்சி பகுதியில் வடக்கு நோக்கித் திரும்பி, அதன் பிறகு கிழக்கே நோக்கி திரும்பி வங்கக்கடலில் சேருகிறது. இது மிகவும் அரிதானது. அதனால் கங்கைக்கு இணையாக இந்த ஆற்றைக் கருதி போற்றுவோர் பலர் உண்டு.

இத்தனை சிறப்பு மிக்க சங்கராபரணி ஆற்றங்கரையில் கங்கா ஆரத்தி நிகழ்ச்சி வாரந்தோறும் சனிக்கிழமையன்று நடந்து வருகிறது. ஆரத்தி நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்கின்றனர். மேலும், தீபங்களை ஏற்றி ஆற்றில் மிதக்க விட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

ஆனால், திருக்காஞ்சியில் உள்ள சங்கராபரணி ஆற்று நீர் தற்போது கழிவு நீராகி தேங்கி நிற்கிறது. நாள்தோறும் பித்ரு கர்மங்கள் செய்ய வருவோர், ஆற்று நீரில் இறங்கினால் நோய்த்தொற்று ஏற்படும் அளவுக்கு கழிவுநீராகி விட்டது.

இதுதொடர்பாக பக்தர்கள் கூறுகையில், "காசிக்கு இணையான இத்தலத்தின் தீர்த்தம், மோசமான நிலையில் உள்ளது. முன்னோர் வழிபாடு செய்ய இங்கு வந்தால் கோயில் தரப்பில் ரூ.200 வரை கட்டணம் வாங்குகின்றனர். அதன் பிறகே பிதுர் காரியங்கள் செய்கிறோம். ஆனால் நீராடச் சென்றால் சங்கராபரணி ஆற்றில் இறங்கவே முடியவில்லை.

இதை தூய்மைப்படுத்த அரசு தரப்பு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆற்றில் கழிவு நீர் கலப்பதைத் தடுத்து, இதை சரி செய்யவேண்டும்” என்று தெரிவிக்கின்றனர்.

x