ராமேசுவரம் - கன்னியாகுமரி இடையே விரைவில் சுற்றுலாப் படகுப் போக்குவரத்து!


ராமேசுவரம்: சாகர்மாலா திட்டத்தின் கீழ் ராமேசுவரத் திலிருந்து, கன்னியாகுமரிக்கு விரைவில் சுற்றுலாப் படகுப் போக்குவரத்து தொடங்க தமிழ்நாடு கடல்சார் வாரியம் திட்ட மிட்டுள்ளது.

நாட்டில் 7,500 கி.மீ. நீளமுள்ள கடற்கரை மற்றும் சுமார் 25 ஆயிரம் கி.மீ. நீளத்தில் நீர்வழிப் பாதைகள் உள்ளன. இந்நிலையில் சாகர்மாலா என்ற சிறப்புத் திட்டம் மூலம் உள்நாட்டு நீர்வழி சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்தும் பணி சுமார் ரூ.4 லட்சம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த மத்திய அரசு பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது.

இதன்படி நீண்ட 1,100 கி.மீ. நீளம் கடற்கரையைக் கொண்ட தமிழகத்தில் கப்பல் தளங்கள், துறைமுக இணைப்புச் சாலைகள், பயணிகள் முனையம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத் தப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு சாகர்மாலா திட்டத்தில் தமிழ்நாட்டில் ராமேசுவரத்தில் உள்ள அக்னிதீர்த்தக் கடற்கரை, வில்லூண்டி தீர்த்தக் கடற்கரை, கடலூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய வகையில் மிதவை இறங்கு தளங்கள் அமைப்பதற்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில், கடந்த மாதம் ராமேசு வரம் – தனுஷ்கோடி மற்றும் ராமேசுவரம் - கன்னியாகுமரி இடையே சுற்றுலாப் படகு போக்குவரத்து தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்த ஆய்வு தமிழ்நாடு கடல்சார் வாரியத்தால் மேற்கொள்ளப் பட்டது.

இதற்காக ராமேசுவரத்தில் மிதவை இறங்குதளம் கட்டுவதற்காக அக்னி தீர்த்த கடற்கரை, வில்லூண்டி தீர்த்தக் கடற்கரை பகுதிகளில் கடலில் மணலை ஆய்வு செய்யும் பணியும் நடைபெற்றது.

தொடர்ந்து மிதவை இறங்கு தளத்துக்கான கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்கு திட்ட அறிக்கை மற்றும் மதிப் பீடுகள் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதற்கான அனுமதி கிடைத்ததும், விரைவில் ராமேசுவரத்தில் மிதவை இறங்கு தளம் அமைக்கப்பட்டு தனுஷ்கோடி மற்றும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

நீடித்த மற்றும் பாதுகாப்பானது: பாரம்பரியமான கப்பல் மற்றும் படகு இறங்குதளங்கள் கான்கிரீட் அல்லது மரப்பலகைகள் கொண்டு கட்டப்படுகின்றன. ஆனால் மிதவை இறங்குதளம் என்பது மிதக்கும் பொருட்களை கொண்டு கட்டப்படுகிறது. இது வலுவான, நிலையான, நீடித்த மற்றும் பாதுகாப்பானது ஆகும். கடல்-ஆறு விமான முனையங்கள், தனியார் சுற்றுலா படகு, கப்பல்துறை மற்றும் மீன்பிடி இறங்குதளங்களில் இவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
மேலும் கடல்கள், பெருங்கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் இந்த மிதவை இறங்குதளங்களை பயன்படுத்தலாம். நாட்டில் மும்பை கேட் வே ஆஃப் இந்தியா, கோவாவில் மண்டோவி நதி, கொச்சியில் இந்திய கடற்படை தளம், கொல்கத்தாவில் ஹூக்ளி நதி, விஜயவாடாவில் பிரகாசம் தடுப்பணை, அகமதாபாத்தில் சபர்மதி நதி உள் ளிட்ட பல்வேறு இடங்களில் மிதவை இறங்குதளங்கள் பயன்பாட்டில் உள்ளன

x