“புத்தகங்களைக் காட்டிலும் பெரிய வழித்துணை வேறு எதுவும் கிடையாது!” - எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் பேச்சு


திண்டுக்கல்லில் நடந்த புத்தகத்திருவிழாவில் பேசிய பாரதிகிருஷ்ணகுமார். படம்: நா.தங்கரத்தினம்.

திண்டுக்கல்: புத்தகங்களை காட்டிலும் மனிதர்களுக்கு பெரிய வழித் துணை எதுவும் கிடையாது. புத்தங்கங்களை குனிந்து படிக்கும் போது அது உங்களை நிமிரச்செய்கிறது என திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் கூறியுள்ளார்.

திண்டுக்கல்லில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் ‘தீங்கின்றி நாடெல்லாம்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் பேசியதாவது: "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் வான்சிறப்பு என மழை குறித்து கூறியுள்ளார். ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள், தனது ஆண்டாள் பாசுரத்திலும் மழையின் சிறப்பு குறித்து தெரிவித்துள்ளார். நான்கு பருவ காலங்கள் மாறிவருவதை சிறுவயதில் பார்த்துள்ளேன். தற்போது அப்படி இல்லை. வெயில் எப்போதும் அடிக்கிறது. மழை எப்பொழுது வரும் என்றே தெரியவில்லை.

‘ஒன்று பரம்பொருள், நாம் அதன் மக்கள்’ என்பது தான் தமிழ் வேதம். எல்லா கருத்துக்கும் மதிப்பளிப்பது தான் தமிழின் பெருமை. தமிழ் மொழி சமயம் கடந்தது. புத்தகங்களை காட்டிலும் பெரிய வழித்துணை மனிதர்களுக்கு எதுவும் கிடையாது. புத்தகங்களை குனிந்து படிக்கும் போது அது உங்களை நிமிரச்செய்கிறது. இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டும் அல்ல. இது அனைவருக்கும் ஆனது, இயற்கைக்கானது.

யானையிடமும், தேனீயிடமும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவது. இயற்கையை நீங்கள் சீரழித்தால், தண்ணீர் தேங்கும் இடங்களை ஆக்கிரமித்தால், நீரின் வாழ்விடங்களை அழித்தால், நீர் செல்லும் பாதையை அடைத்தால், அது உங்களுக்கு மறந்துவிடும். ஆனால் நீர் தனது வழித்தடத்தையும், வாழ்விடத்தையும் மறக்காது. தான் ஓடிய பாதையை தண்ணீர் பல ஆண்டுகள் ஆனாலும் மறக்காமல் தேடி வரும். அதனால் தான் தற்போது சென்னையில் வீட்டிற்குள் வருகிறது.

இயற்கையோடு மோதினால் இயற்கை உங்களை அழித்துவிடும். இயற்கையோடு மோதி வாழ்ந்த உயிரினம் எதுவும் இல்லை. இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும். பிற உயிர்களை நேசிக்கும், பிற உயிர்களுக்கும் இந்த உலகில் வாழும் உரிமை உள்ளது என்பதை புத்தகங்கள் படித்து அறிந்துகொள்ள வேண்டும்" என்று பாரதி கிருஷ்ண குமார் கூறினார்.

x