நாகர்கோவில்: ஆயுதபூஜை, விஜயதசமி, ஞாயிற்றுக்கிழமை என 3 நாள் தொடர் விடுமுறையால் கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சூரிய உதயத்தை முக்கடல் சங்கமத்தில் குழந்தைகளுடன் கூடிய பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் விடுமுறை தினங்கள், வார இறுதி நாட்கள், பண்டிகை தினங்கள், கோடை விடுமுறை போன்ற நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை புரிவர். இதனால் கன்னியாகுமரி மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலா மையங்கள் களைகட்டும். நடைபாதை வியாபாரிகள் முதல் பல்பொருட்கள் விற்பனையகம் வரை வியாபாரம் களைகட்டும்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறையாலும், நேற்று விஜயதசமி விடுமுறை என்பதாலும், இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் 3 நாள் தொடர் விடுமுறை வருவதால் தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர். அத்துடன் ஏற்கனவே தசரா விடுமுறையை முன்னிட்டு வட மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரி வந்திருந்தனர்.
இதனால் கன்னியாகுமரியில் உள்ள அரசு மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன. அறை கிடைக்காதவர்கள் நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கினர். இன்று அதிகாலையில் சூரிய உதயத்தை பார்ப்பதற்கு முக்கடல் சங்கம கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குழந்தைகளுடன் கூடினர். மேகமூட்டத்தால் 6.15 மணியளவில் தெரியவேண்டிய சூரிய உதயம் ஒரு மணி நேரம் தாமதமாக தென்பட்டது.
சூரிய உதயம் தெளிவாக தென்படவில்லை என்றாலும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் செல்பி எடுத்து கிழ்ந்தனர். பின்னர் கடல் நடுவே விவேகானந்தர் பாறைக்கு குடும்பத்துடன் படகு சவாரி சென்று திரும்பினர். சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கன்னியாகுமரி கடற்கரை, விவேகானந்தா கேந்திரா பகுதிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. திற்பரப்பு அருவிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.
மேலும் மாத்தூர் தொட்டிப்பாலம், உதயகிரி கோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, வட்டக்கோட்டை மற்றும் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. நாகர்கோவில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலைகள், மற்றும் குறுக்கு சாலைகளில் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. முக்கிய பகுதிகளில் போலீஸார் நின்று போக்குவரத்தை சீரமைத்தனர்.