குமரி சங்கமம் நிகழ்வில் பறை இசையுடன் கிராமிய கலைஞர்கள் நடனம்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்


கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நடந்த குமரி சங்கமம் நிகழ்ச்சியில் உற்சாகமாக பறை இசையுடன் நடனமாடிய கிராமிய கலைஞர்கள்.

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் நடைபெற்ற குமரி சங்கம் நிகழ்ச்சியில் பறை இசையுடன் கிராமிய கலைஞர் ஆடிய நடனத்தை சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக கண்டுகழித்தனர்.

திருநெல்வேலி மண்டல கலைப்பண்பாட்டுத் துறையின் சார்பில், கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் குமரி சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி கடந்த 11, 12ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மண்டலத்தில் நிகழ்த்தப்பட்டு வரும் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளான கொம்பு தப்பு, நையாண்டிமேளம், கரகாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கணியான் கூத்து, தேவராட்டம், மாடாட்டம், மயிலாட்டம், குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், தெம்மாங்கு பாடல், வில்லிசை, களியலாட்டம் மற்றும் தோல்பாவைக்கூத்து போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழா நிறைவை முன்னிட்டு சாத்தூர் நாகராஜன் குழுவினரின் நையாண்டி மேளம், கரகாட்டம், சிவகாசி கலைசுடர்மணி பால்ராஜ் குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சிகளும், தச்சநல்லூர் சங்கரபாண்டி குழுவினரின் கணியான்கூத்து நிகழ்ச்சியும், தோவாளை கலைமாமணி பரமசிவராவ் குழுவினரின் தோல்பாவை கூத்து நிகழ்ச்சியும், மேல்புறம் கலைவளர்மணி வின்சென் குழுவினரின் களரி நிகழ்ச்சியும், சங்கரன்கோவில் கலைவளர்மணி முத்துராமலிங்கம் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சியும், மரிய டேவிட் குழுவினரின் பறை, கரகம், ஒயிலாட்டம், கிராமிய பாடல், சாட்டை குச்சி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கிராமிய கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்கள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. கலை நிகழ்ச்சிகளை நடத்திய குழுவினரை பாராட்டி பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இரு நாட்கள் நடைபெற்ற குமரி சங்கமம் – நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் சுமார் 375 கலைஞர்கள் கலந்து கொண்டனர். குமரி சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டனர்.

நிகழ்ச்சியில் கலைப்பண்பாட்டுத் துறை உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு ஜாண்ஜெகத் பிரைட், மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வலெட் சுஷ்மா, மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர்.

x