மதுரையில் களைகட்டிய தீபாவளி வியாபாரம்: மீனாட்சியம்மன் கோயில் கடை வீதிகளில் மக்கள் கூட்டம்!


மதுரையில் களைகட்டிய தீபாவளி பண்டிகை வியாபாரம் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: தொடர் விடுமுறையால் தென் மாவட்ட மக்கள், புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு மதுரைக்கு திரண்டு வந்ததால் கடைகளில் தீபாவளி பண்டிகை வியாபாரம் களைகட்டியது. மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள கடை வீதிகளில் திருவிழா போல் மக்கள் கூட்டம் அலைமோதியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மதுரை மாநகரில் ஆண்டு முழுவதுமே திருவிழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுவதால் இந்த நகரம், திருவிழாக்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. உள்ளூர் திருவிழாக்களுக்கே மக்கள், மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள கடை வீதிகளில் புத்தாடைகள், ஆபரணங்கள், பூஜைப் பொருட்கள் வாங்க திரள்வார்கள். தமிழ் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் முக்கிய முஸ்லீம் பண்டிகை நாட்களில் சொல்லவே வேண்டாம், மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள மாசி, சித்திரை, வெளி வீதிகளில் நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்து செல்வார்கள்.

தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதால் இம்மாத தொடக்கத்தில் இருந்தே தென் மாவட்ட மக்கள், புத்தாடைகள், ஆபரணங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், பலகாரம் செய்வதற்கான மளிகைப்பொருட்கள், வீட்டை அலங்கரிப்பதற்கான அலங்காரப்பொருட்கள் போன்ற பல்வேறு வகை பொருட்களை வாங்க முனைந்துள்ளதால், விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியது. பூஜை விடுமுறை நாட்களையொட்டி, ஒட்டுமொத்த தென் மாவட்ட மக்களும், மதுரையில் புத்தாடைகள், பல்வகை வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு திரண்டனர். இன்று காலை முதல் இரவு வரை மக்கள் கூட்டம் அலைமோதியதால் மீனாட்சியம்மன் கோயில் கடை வீதிகள் திணறின. மக்கள் நடந்து செல்லக்கூட போக முடியாத அளவிற்கு கூட்ட நெரிசல் காணப்பட்டது.

அனைத்துக் கடைகளிலும் வியாபாரம் அமோகமாக நடந்தது. அதனால், முக்கிய ஜவுளி கடைகளில் தீபாவளி சீசன் வியாபாரத்திற்காக நிரந்தர ஊழியர்களுடன், சீசன் தொழிலாளர்கள் புதிதாக தேர்வு செய்து அவர்களுக்கும் பயிற்சி கொடுத்து வியாபாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். தற்போது மீனாட்சியம்மன் கோயில் கடை வீதிகளை தாண்டி, மதுரையின் வடக்கு பகுதியிலும் தற்போது ஏராளமான பெரிய நிறுவன ஜவுளி கடைகள், வீட்டு உபயோக கடைகள் வந்துள்ளன. அந்த கடைகளிலும் மக்கள் கூட்டத்தால் தீபாவளி வியாபாரம் களைகட்டியுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், அடுத்தடுத்த நாட்களிலும் இன்னும் கூட்டம் அதிகமாக மதுரைக்கு வர உள்ளதால் மாநகர காவல் துறையும், மாநகராட்சி நிர்வாகமும் கூட்ட நெரிசலை சமாளிக்க இணைந்து அவர்களுக்கு தேவையான பார்க்கிங் வசதி, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

x