குன்னூர் காட்டேரி பூங்காவில் குவிந்த பட்டாம்பூச்சிகள் - சுற்றுலா பயணிகள் பரவசம்


குன்னூர்: குன்னூர் காட்டேரி பூங்கா பகுதியில் ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் வந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் பரவசம் அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில், தற்போது பட்டாம் பூச்சிகளின் சீசன் தொடங்கி உள்ளது. சமவெளிப் பகுதிகளில் தற்போது உஷ்ணம் அதிகரிக்க தொடங்கி விட்டது. இதன் காரணமாக, குளிர் வாசஸ்தலங்களை தேடி பட்டாம் பூச்சிகள் இடம் பெயர்ந்து வருகின்றன. குன்னூரில் தற்போது அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியசாக உள்ளதால், இந்த சீதோஷ்ண நிலை பட்டாம் பூச்சிகளுக்கு ஏற்றதாக உள்ளது.

தற்போது, குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் 20 வகையான பட்டாம் பூச்சிகள் வருகை தந்துள்ளதாக, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதில், 'நீலப்புலி என அழைக்கப்படும் திருமலை லிம்னியாஸ் ' எனப்படும் பட்டாம் பூச்சிகள் ஆயிரக்கணக்கில் காட்டேரி பூங்கா பகுதிகளில் மலர் செடிகளில் தேன் உட்கொண்டு வருகின்றன.

இத்தகைய பட்டாம்பூச்சிகளை 'படம்' எடுக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த வகை பட்டாம்பூச்சி பரந்த இறக்கைகள் கொண்ட ஒரு பெரிய பட்டாம்பூச்சி. இது 90 முதல் 100 மில்லிமீட்டர் வரை இறக்கைகள் கொண்டது.

ஆண் பறவைகள் பெண்களை விட சிறியதாக இருக்கும். இறக்கையின் மேல் பக்கம் அடர் பழுப்பு முதல் கருப்பு வரை மற்றும் நீல-வெள்ளை, அரை-வெளிப்படையான புள்ளிகள் மற்றும் கோடுகளுடன் அழகாக காணப்படுகின்றன. தற்போது இதமான காலநிலையில் தற்போது பசுமையான புல்தரைகளில் பறந்து வருவது சுற்றுலா பயணிகளுக்கு கண் கொள்ளாத காட்சியாக அமைந்துள்ளது.

x