கோவை: கருணை உள்ள மனிதரை சுற்றித்தான் அனைவரும் இருப்பார்கள் என தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு தெரிவித்தார்.
கோவை கே.ஜி. மருத்துவ மனை தலைவர் டாக்டர் ஜி.பக்தவத்சலம் எழுதிய ‘வாழ்வே மாயம் மனமே ஒரு மந்திரம்’ என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு நூலை வெளியிட்டு பேசியதாவது: கே.ஜி. மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜி.பக்தவத்சலம் எண்ணற்ற தொண்டுகளை செய்து வருகிறார். இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரண உதவிகளையும் செய்து வருகிறார்.
அவர், தனது அனுபவத்தையும், ஞானத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வகையில் நூல்களை எழுதியுள்ளார். மனிதனுக்கு புகழ், பணம், பதவியைத் தேடுவதில் மகிழ்ச்சி கிடைத்துவிடும் என எண்ணிக் கொள்கின்றனர். ஆனால், மகிழ்ச்சி நம்மிடம்தான் உள்ளது. கருணை உள்ள மனிதரை சுற்றித்தான் அனைவரும் இருப்பார்கள். தன்னலம் இல்லாமல் இருப்பவர்கள் பேரின்பமாக உள்ளனர். பெரும்பான்மையான மருத்துவக் கண்டுபிடிப்புகள் போர் களில்தான் கண்டுபிடிக்கப்பட்டன.
போரில் காயமடைந்த வீரர்களை காப்பாற்ற மருத்துவக் கண்டுபிடிப்புகள் பயன்படுத்தப்பட்டன. மிகச்சிறந்த கணினியைவிட மூளை வேகமாக செயல் படுகிறது. ஒவ்வோர் உறுப்பும் துல்லியமாகச் செயல்படுகிறது. மனித உறுப்புகளுக்கு ஓய்வு, உணவு, அமைதியான மனநிலையை தர வேண்டும், என்றார்.
நிகழ்ச்சியில் கே.ஜி.மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜி.பக்தவத்சலம் ஏற்புரை யாற்றினார். கே.ஜி. மருத்துவமனை நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம், ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுநர் என்.சுந்தரவடிவேலு, ரோட்டரி கிளப் சென்டினியல் தலைவர் கே.சி.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.