உதகை: உதகையில் 2,500 குடிநீர் பாட்டில்களைக் கொண்டு, ‘ஐ லவ் ஊட்டி' என்ற செல்ஃபி பாய்ன்ட் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள 'தூய்மை இந்தியா' திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளான நிலையில், இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதில், நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி, உதகை நகராட்சி மற்றும் தனியார் அமைப்பு இணைந்து, சுற்றுலா பயணிகளால் வீசப்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டிகளை சேகரித்து, பல்வேறு அலங்காரப் பொருட்களை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, 2,500 பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை கொண்டு, உதகை சேரிங்கிராஸ் ஆடம்ஸ் நீரூற்று முன்பு, ‘ஐ லவ் ஊட்டி' என்ற வடிவில் செல்ஃபி பாய்ன்ட் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் அருகே நின்று சுற்றுலா பயணிகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். மாவட்டத்திலுள்ள பிற நகராட்சிகளிலும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அலங்கார வடிவமைப்புகளை காட்சிப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.