கோவையில் ஊட்டச்சத்து விழிப்புணர்வுக்காக காய்கறிகளை ஆபரணமாக அணிந்த பெண்கள்!


ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் பணிகள் சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாத நிறைவு விழாவை முன்னிட்டு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பேரணி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது. பெண்கள், காய்கறிகளை ஆபரணமாக அணிந்தும், முகத்தில் வண்ணம் பூசியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். படம்: ஜெ.மனோகரன் 

கோவை: வேளாண்மை உழவர் நலத்துறை உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின்கீழ் அனைத்து வட்டாரங்களிலும் சிறுதானிய சாகுபடியை ஊக்குவைக்கும் வகையில், பிரச்சார வாகனங்கள் தொடக்க விழா கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். சிறுதானிய பயிர்களின் சாகுபடி பரப்பை அதிகரிக்கவும் விவசாயிகளை ஊக்குவிக்கவும் சிறுதானிய விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவைகள் ஆகியவை மானிய விலையிலும், பயிர் பாதுகாப்பு மருந்துகள் உள்ளிட்ட விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பிரச்சார வாகனங்கள் அனைத்து வட்டாரங்களிலும் சிறுதானிங்களின் சாகுபடியை ஊக்குவைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

முன்னதாக, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் பணிகள் சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாத நிறைவு விழாவை முன்னிட்டு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பேரணி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், செல்வபுரம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட வட்டாரங்களைச் சேர்ந்த ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் பணிகள் சார்பில், வள்ளி கும்மி, கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெண்கள், காய்கறிகளை ஆபரணமாக அணிந்தும், முகத்தில் வண்ணம் பூசியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில், கோவையின் பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள் பலர் பங்கேற்று, ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

x