தருவைகுளம் அருகே கண்மாய் பகுதியில் பழங்கால சுடுமண் கலனா? - விரைந்து ஆய்வு நடத்த வலியுறுத்தல்


தருவைகுளம் அருகே கண்மாய் பகுதியில் காணப்படும் சுடுமண் கனல். (அடுத்தப்படம்) குழிழ்தூம்பு.

கோவில்பட்டி: தருவைகுளம் அருகே கண்மாய் பகுதியில் காணப்படுவது பழங்கால சுடுமண் கனலா என ஆய்வு செய்ய தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தருவைகுளம் அருகே பட்டினமருதூர் மற்றும் வேப்பலோடை கண்மாய்களில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ‘குமிழிதூம்பு’ கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பட்டினமருதூருக்கு அடுத்த ‘கல்மேடு’ கிராமத்திலுள்ள அணைக்கட்டினை பலப்படுத்தும் பணியின் போது தோண்டப்பட்ட 10 அடி ஆழ பள்ளத்தில் 7 அடிக்கு கீழே காணப்படும் 200 அடி நீளம் கொண்ட சிற்பங்களோடு கூடிய கல் கட்டுமான மதில் சுவற்றினை கண்டறியப்பட்டுள்ளது.

இப்பகுதி தொல்லியல் துறை ஆய்வுக்கு ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பட்டினமருதூர் கண்மாயின் வடபுற கரையில் உள்ள சிறிய அத்தி மரம் அருகே 4 அடி வெளிவிட்டமும், 2 அங்குலம் விளிம்பு கனமும் கொண்ட சுடுமண் கனல் தென்பட்டது.

இது குறித்து தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி கூறுகையில், "ஏற்கெனவே பட்டினமருதூர் பகுதி தொல்லியல் ஆய்வுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது. அந்தளவுக்கு தொன்மையான விஷயங்கள் பொதிந்து கிடக்கின்றன. இதில், இங்குள்ள கண்மாய் வலப்புற கரையில் பெரிய வட்ட வடிவில் ஏதோ தென்படுவதாக கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதனை வந்து பார்த்தபோது, 4 அடி வெளிவிட்டமும், 2 அங்குலம் விளிம்பு கனமும் கொண்ட சுடுமண் கனலா அல்லது உறை கிணறா என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில் உள்ளது.

இதுகுறித்து விசாரித்தபோது, இந்த கண்மாய் 1950-ம் ஆண்டுக்கு பின்பு தான் தோண்டப்பட்டது. இதன் மேல்புறம் பகுதியில் காணப்படும் மணல் கல் கட்டுமானங்கள் தொன்மையான சாலையை போன்றுள்ளது. இதே நேர்கோட்டில் வடக்கே உள்ள பகுதியிலும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வெடி வைத்து தகர்க்கப்பட்ட சாலை போன்ற மணல் கல் சிதைவுகளும் காணப்படுகின்றன.

எனவே, இந்த வழிதான் பழைய ராமேசுவரம் - திருச்செந்தூர் சாலையாக (சேது பாதை) இருக்கலாம். 1958-ம் ஆண்டு பின்னர் தருவைகுளம் - சாயல்குடி சாலை அமைக்கும்போது, இந்த வழித்தடத்தை புறக்கணித்து, மேற்கே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது, கள ஆய்வில் தெரியவருகிறது. ஏற்கெனவே ஆவணப்படுத்தியுள்ள வேப்பலோடை, பட்டினமருதூர், தருவைக்குளம் போன்ற பகுதிகளில் நேர்கோட்டில் அமைந்துள்ளன. எனவே, தொல்லியல் துறையின் அதிகாரிகள் உடனடியாக ஆய்வு பணிகளை தொடங்க வேண்டும்,” என்றார்.

குமிழ் தூம்பு: தருவைகுளம் மாப்பிள்ளைநாயக்கன் கண்மாய் பகுதியில் சுமார் 8 - 10ம் நூற்றாண்டுக்கு உட்பட்ட குழிழ்தூம்பும் கண்டறியப்பட்டுள்ளது. இது மண் கலவைகளால் செய்யப்பட்டிருக்கலாம். தற்போது கல்வெட்டுகள் ஏதும் காணப்படவில்லை. இதன் உயரம் சுமார் 14 அடி, அகலம் 1.25 அடி, கனம் முக்கால் அடியுடன் காணப்படுகிறது. இதுகுறித்தும் தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x