காம்யா கார்த்திகேயன்... 16 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறிய சிறுமிக்கு குவியும் வாழ்த்துகள்


எவரெஸ்டில் காம்யா தனது தந்தை கார்த்திகேயனுடன்

16 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறியதன் மூலம் தேசிய மற்றும் உலக சாதனைகளை படைத்திருக்கிறார் இந்தியாவின் காம்யா கார்த்திகேயன்.

இந்திய கடற்படையில் கமாண்டராக இருப்பவர் எஸ்.கார்த்திகேயன். மலையேற்றத்தில் ஈடுபாடுடைய இவரது வேகம், கார்த்திகேயனின் மகள் காம்யாவையும் இளம் வயது முதலே தொற்றிக்கொண்டது. இதன் விளைவாக தனது 16 வயதில் 8,849 மீட்டர்கள் மலையேறி எவரெஸ்ட் சிகரம் தொட்டதற்காக காம்யா கார்த்திகேயன், தற்போது பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.

நேபாளத்தின் பக்கமிருந்து தனது தந்தை கார்த்திகேயனுடன் மலையேறிய காம்யா, வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரம் தொட்டிருக்கிறார். இவ்வகையில் இந்தியாவில் இந்த சாதனையை படைத்த முதல் இளம்வயதினராகவும், உலகளவில் இரண்டாவது இளம்வயது பெண்ணாகவும் அங்கீகாரம் பெற்றிருக்கிறார் காம்யா கார்த்திகேயன். இதனையொட்டி தந்தை - மகள் இருவரையும் இந்திய கடற்படை வாழ்த்தியுள்ளது.

"மும்பையில் உள்ள கடற்படையினர் குழந்தைகளுக்கான பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியான காம்யா கார்த்திகேயன், தனது தந்தையும் இந்திய கடற்படையின் கமாண்டருமான எஸ்.கார்த்திகேயனுடன் இணைந்து, மே 20 அன்று எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்தனர்" என்று எக்ஸ் தளத்தில் இந்திய கடற்படை வாழ்த்தியுள்ளது.

மேலும் ”நேபாளத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இளம் இந்தியராகவும், உலகின் இரண்டாவது இளம்பெண்ணாகவும் சாதனை படைத்ததற்கு இந்திய கடற்படை வாழ்த்துகிறது. காம்யா மிக உயர்ந்த சிகரங்களைத் தொடுவதில் அபார தைரியத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்தியுள்ளார். ஏழு கண்டங்களில் ஆறில் உயரமான சிகரங்களைத் தொட்டதும் அவரது சாதனைகளில் அடங்கும்” என்று கடற்படையின் வாழ்த்து பதிவு நீள்கிறது.

காம்யா கார்த்திகேயன்

காம்யா கார்த்திகேயன் தனது மூன்று வயதில் மலையேற்றத்தைத் தொடங்கினார். அவரது இமயமலை முயற்சிகள் 2015-ல் ஏழு வயதில், சந்திரசிலா சிகரத்தை தொட்டதில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, 2016-ல் கேதர்கந்தா சிகரம் ஏறினார். மே 2017-ல் தனது 13 வயதில் எவரெஸ்ட் பேஸ் கேம்பிற்கு மலையேறினார். இதிலும் உலகளவில் சாதித்த இரண்டாவது இளம்பெண் ஆனார். தொடர்ந்து அகோன்காகுவா மலையை அடைந்த இளம்பெண்ணாகவும் அவர் அடுத்த சாதனையை படைத்தார்.

இதையும் வாசிக்கலாமே...

x