மதுரையில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்டமதிப்பு ரூ.1,978 கோடியில் இருந்து ரூ.2,021 கோடியாக திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் தோப்பூரில் 221 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான திட்டத்திற்கு மத்திய அரசு டிசம்பர், 2018-ம் ஆண்டு 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி இதற்கு அடிக்கல் நாட்டினர். மதுரையுடன் அறித்த நாட்டின் பிற எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து பிரதமர் நரேந்திரமோடியால் திறக்கப்பட்டது.
ஆனால், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் மட்டும் துவங்காதது பெரும் சர்ச்சையானது. இந்த விவகாரம் மக்களவைத் தேர்தல் களத்தில் எதிர்க்கட்சிகளால் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 150 படுக்கைகள் கொண்ட தொற்று நோய்ப் பிரிவு கூடுதலாக துவக்குவதன் காரணமாக, திட்ட மதிப்பீடு, 1,264 கோடி ரூபாயில் இருந்து, 1,977.8 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இத்தொகையில், 82 சதவீதம் அளவு 1,627 கோடி ரூபாயை, ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா நிறுவனம் கடன் தருகிறது.
இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மாணவர்கள் சேர்க்கையும் மூன்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன்படி 150 மாணவர்கள் ராமநாதபுரத்தில் படிக்கின்றனர். 2023 ஆகஸ்ட் 17-ம் தேதி மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை, எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது.
இதன்படி எல் அண்டு டி நிறுவனத்திற்கு கட்டுமான டெண்டர் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2024 மார்ச் 14-ம் தேதி கட்டுமான முன் பணிகள் தொடங்கப்பட்டது. இதையடுத்து கட்டுமானத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை மே 2- ம் தேதி எய்ம்ஸ் நிர்வாகம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் அனுமதி வழங்கலாம் என மே 10-ம் தேதி சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு பரிந்துரைத்தது.
இந்த நிலையில், மே 20-ம் தேதி கட்டுமானப் பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு வழங்கியது. எல் அண்டு டி நிறுவனம் கட்டுமான பணிகளைத் துவங்கியதாக, மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அது வெளியிட்டுள்ள அறிக்கையில், "எல் அண்டு டி நிறுவனத்திற்கு மே 4-ம் தேதி மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. குறைந்தபட்ச தொகையாக இந்த நிறுவனம், 1,118.35 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோரியது. தற்போது கட்டுமான திட்டத்தின் மதிப்பு, 1,978 கோடி ரூபாயிலிருந்து 2,021 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.