‘ஏஐ’ பெரிதா... ‘சாய்’ பெரிதா? - சர்வதேச தேநீர் தினத்தில் ஸ்விக்கி பற்றவைத்த ருசிகர விவாதம்


சர்வதேச தேநீர் தினம்

சர்வதேச தேநீர் தினத்தை முன்னிட்டு இணையத்தில் ஸ்விக்கி கொளுத்திப்போட்ட விவாதம் ஒன்று நெட்டிசன்களை சுவாரசியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சர்வதேச தேநீர் தினமான இன்று(மே 21), தங்கள் அன்றாடங்களை ருசிகரமாக்கும் தேநீருக்கு நன்றி சொல்லும் விதமாக, உலகமெங்கும் தேநீர் காதலர்கள் இணையத்தில் பல சுவாரசியங்களை பகிர்ந்து வருகின்றனர். அவர்களின் விவாதக் கச்சேரியில் இணைந்த, உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி, அந்த சுவாரசியத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் சென்றது.

ஏஐ

சுருக்கமாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அனைத்து துறைகளிலும் எதிரொலித்து வருகிறது. ஒருபுறம் நிறுவனங்களின் செலவினம் மற்றும் பணி சுமையை குறைப்பதால் ஏஐ வரவேற்பு பெற்றுள்ளது. மறுபக்கம் பணியாளர்களின் இருப்பை காலி செய்வதால், ஏஐ-க்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ஏஐ பயன்பாடுகளை தரிசிக்கும் முதல் தலைமுறையாக, சமகாலத்தவர்கள் அதன் பயன்பாடுகளில் திளைத்துள்ளனர்.

இந்த ஏஐ என்பதை, வட இந்தியாவில் ’சாய்’ என வழங்கப்படும் தேநீருடன் ஒப்பிட்டு ஸ்விக்கி நிறுவனம் சுவாரசிய விவாதத்தை கிளப்பியது. அசாம் முதல் நீலகிரி வரை இந்தியர்களின் நா மொட்டுகளில் ஆராதிக்கப்படும் தேநீர், ஆங்கிலேயர் வாயிலாக சீனத்திலிருந்து நமக்கு இறக்குமதியானது. பல நாடுகளிலும் விதவிதமான சேர்க்கைகள் மற்றும் ருசிகளில் தேநீர் வழங்கப்பட்டாலும், இந்தியர்களின் ’சாய்’க்கு தனி மகத்துவம் உண்டு. இந்த சாய் மற்றும் ஏஐ இடையிலான சுவாரசியங்களே இன்றைய தினம் இணையத்தை கலக்கி வருகின்றன.

ஏஐ என்பது பணிகளை பறிக்கிறது, பிரச்சினைகளை தீர்க்கிறது, உலகை ஆள்கிறது, செயற்கையானது என்று ஸ்விக்கி பட்டியலிட்டுள்ளது. மறுபுறம் சாய் என்பது மன அழுத்தத்தை பறிக்கிறது, பிரச்சினைகளை மறக்கடிக்கச் செய்கிறது, இதயங்களை ஆக்கிரமிக்கிறது மற்றும் இயற்கையானது எனவும் ஸ்விக்கி பட்டியலிட்டுள்ளது.

அந்த பதிவின் கீழ் இணையவாசிகள் அணிதிரண்டு தங்களது கருத்துக்களையும், தேநீருடனான சுவாரசியங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

x