கோவாக்ஸின் தடுப்பூசி பக்கவிளைவுகள்... மருத்துவ ஆய்வறிக்கைக்கு எதிராக ஐசிஎம்ஆர் கடும் கண்டனம்


பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசி

கோவாக்ஸின் தடுப்பூசிகளால் பக்கவிளைவு ஏற்படும் என்ற பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

கொரோனா பெருந்தொற்றிலிருந்து இந்தியர்களை காத்ததில் 2 தடுப்பூசிகளுக்கு முக்கியப்பங்குண்டு. கோவிஷீல்டு, கோவாக்ஸின் என அந்த 2 தடுப்பூசிகளும் அண்மையில் அடுத்தடுத்து சர்ச்சைக்கு ஆளாயின. கோவிஷீல்டு தடுப்பூசி தொடர்பாக அதனைத் தயாரித்த இங்கிலாந்து நிறுவனம் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் இந்தியாவில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

கோவிஷீல்டு தடுப்பூசி

அஸ்ட்ராஜெனிகா மருந்து நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு கோவிஷீல்டு என்ற பிராண்டாக இந்தியர்களின் உயிரைக் காத்தது. இதற்கு அடுத்தபடியாக இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாஸின் தடுப்பூசியும் கணிசமான இந்தியர்களுக்கு போடப்பட்டது. பெருவாரியான இந்தியர்களுக்கு போடப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி இங்கிலாந்தில் சர்ச்சைக்கு ஆளானதில், மக்களவைத் தேர்தல் சமயத்தில் இந்தியாவில் ஆளும் கட்சிக்கும் சங்கடத்தை சேர்த்தது.

இந்த வரிசையில் கோவாக்ஸின் தடுப்பூசிக்கு எதிராக பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்று, புதிய சர்ச்சையைக் கிளப்பியது. கோவாக்ஸின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 3 பேரில் ஒருவருக்கு பக்கவிளைவுகள் ஏற்படுவது குறித்து பல்கலைக்கழக ஆய்வறிக்கை விளக்கியது. இந்த நிலையில் கோவாக்ஸினுக்கு எதிரான இந்த ஆய்வறிக்கையை கேள்விக்கு உட்படுத்திய ஐசிஎம்ஆர் அதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர்

கோவாக்ஸின் தடுப்பூசி தொடர்பான ஆய்வுக்கு , பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் தங்களிடம் எந்த ஒப்புதலையும் பெறவில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. மேலும் கோவாக்ஸின் தொடர்பான மருத்துவ ஆய்வு முழுமையானது அல்ல என்றும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. மேற்படி ஆய்வறிக்கை மோசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், சீரற்ற ஆய்வு முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவற்றின் காரணமாக அந்த ஆய்வு முடிவுகளை திரும்பபெற வேண்டும் என்றும் ஐசிஎம்ஆர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அல்லாது போனால், சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x