ஊட்டி மலை ரயில் சேவை திடீர் ரத்து... சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்


ஊட்டி மலை ரயில்

மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டதில், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் முதன்மையான கோடைவாசஸ்தலமாக விளங்குவது ஊட்டி. கோடை வெயிலின் மத்தியில் ஊட்டிக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலாவாசிகள் பயணப்படுகின்றனர். ஊட்டியின் பல்வேறு சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிப்பதோடு, ஊட்டி மலை ரயிலில் பயணிப்பதும் சுற்றுலா பயணிகளின் நோக்கத்தை நிறைவு செய்யும்.

அந்தளவுக்கு ஊட்டி மலை ரயிலின் பயணமும் அதையொட்டி இயற்கையின் தரிசனமும் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இதனிடையே தற்போது இந்த மலை ரயில் சேவை 2 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எழில் கொஞ்சும் ஊட்டி மலை ரயில் பயணம்

அக்னி வெயில் மற்றும் கொளுத்தும் கோடையின் மத்தியில் கோடை மழையும் ஆங்காங்கே வலுத்து வருகிறது. இந்த கோடை மழையை முன்னிட்டு கனமழைக்கான ரெட் அலர்ட் பல்வேறு மாவட்டங்களில் விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்திலும் பெய்துவரும் கனமழை காரணமாக தண்டவாளங்களில் பாறைகள் மற்றும் மண் சரிவுகள் குறுக்கிட்டுள்ளன. இவற்றை அகற்றும் நோக்கத்திலும், மழைபொழிவு நேரத்தில் மலை ரயில் சேவையின் ஆபத்துகளை தவிர்க்கவும் மேட்டுப்பாளையம் - ஊட்டி மலைரயில் சேவை இன்று தொடங்கி 2 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.

இதுமட்டுமன்றி கோடை விடுமுறையைக் கழிக்க ஊட்டிக்கு சுற்றுலா பயணம் செய்யத் திட்டுமிட்டுள்ளோருக்கு அவற்றை தற்போதைக்கு தவிர்க்குமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா அறிவுறுத்தி உள்ளார். நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழை, அதனையொட்டிய இயற்கை இடைஞ்சல்கள், போக்குவரத்து தடைகள் ஆகியவற்றை ஒட்டியே ஊட்டிக்கான பயணத்தை சுற்றுலா பயணிகள் திட்டமிட வேண்டியிருக்கும்.

ஊட்டி மலை ரயில்

இதன்பொருட்டு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிடுவதைப் பொறுத்து சுற்றுலாப் பயணிகள் தங்கள் ஊட்டி பயணத்திட்டத்தை வகுத்துக்கொள்ளலாம். இதனிடையே மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் சேவைக்காக முன்பதிவு செய்தவர்களுக்கு, முழுக்கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் என தெற்கு ரயில்வே உறுதியளித்துள்ளது.

x