24% மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம்... எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங்!


ககன்தீப் சிங் பேடி

"நம்முடைய சமுதாயத்தில் 24 சதவீதம் மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம், 10 சதவீதம் மக்களுக்கு இரத்தம் அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயும் இருக்கிறது. இதை கட்டுப்படுத்த உடற்பயிற்சி, யோகா மற்றும் பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்" என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உலக உயர் இரத்த அழுத்த தினத்தையொட்டி இரத்த அழுத்தம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் இரண்டாண்டு நிறைவையொட்டி மாஸ்டர் ஹெல்த் செக் அப் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி மற்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி மேலும் ஸ்டான்லி மருத்துவமனையின் முதல்வர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ககன்தீப் சிங் பேடி

இந்த நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங், "உயர் ரத்த அழுத்தம் குறித்து பொதுமக்களிடையே அதிகமான விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ரத்த அழுத்தம் இருந்தால் உடலில் சிறிய, சிறிய 'கல்' உருவாக வாய்ப்பு உள்ளது. ரத்த அழுத்தத்தினால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும். அதனை எதிரொலியாக இருதய பாதிப்பும் ஏற்படும். நம்முடைய சமுதாயத்தில் 24 சதவீத மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம், 10 சதவீதம் மக்களுக்கு ரத்தம் அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்டவை இருக்கிறது. அதிக சால்ட் பயன்படுத்தக்கூடிய உணவு பொருட்களை உட்கொண்டால் ரத்த அழுத்த நோய் உருவாகும். அதனால், அதனை தவிர்க்க வேண்டும்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவைகளை அதிகம் சாப்பிட வேண்டும். ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தினமும் வேலை பார்த்துவிட்டு அப்படியே வருகிறார்கள். உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருந்தால் ரத்த அழுத்தம் நோய் ஏற்படும். உடற்பயிற்சி செய்தால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும். தினந்தோறும் பத்தாயிரம் அடி அல்லது எட்டு கிலோமீட்டர் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தினமும் யோகா பயிற்சி மேற்கொண்டால் மூளை சரியான முறையில் செயல்படும்.

கோப்புப்படம்

உணவகங்களில் சிக்கன் ரைஸ், பிரியாணி போன்ற உணவுகளை உட்கொண்டு அதிகமான உடல் எடையாக இருக்கக் கூடாது. அதிக உடல் எடை இருந்தால் ரத்த அழுத்த நோய் ஏற்படும். தினந்தோறும் 8 மணி நேரம் சரியான உறக்கம் இருக்க வேண்டும். உறக்கம் சரியாக இல்லாவிட்டாலும் ரத்த அழுத்த நோய் ஏற்படும். ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் மாதந்தோறும் மருத்துவர்கள் அணுக வேண்டும். உயர் இரத்தம் அழுத்தம், நீரிழிவு நோய், புற்றுநோய் ஆகியவை அதிகப்படியான மக்களை பாதிக்கும் நோயாக இருக்கின்றன" என்று அவர் கூறினார்

இதையும் வாசிக்கலாமே...

x