கனமழை; அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்துக்கு வராதீங்க... கலெக்டர் அறிவுறுத்தல்!


நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் நாளை தொடங்கி வருகிற 20ம் தேதி வரை மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் யாரும் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வார காலத்துக்கு முன்பு வரை கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் ஏராளமான பொதுமக்கள் மலைப் பிரதேசங்களை நோக்கி சுற்றுலாவிற்காக செல்லத் துவங்கினர். இந்த நிலையில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வெப்பமும் பெருமளவில் குறைந்து இருப்பதால் பொதுமக்கள் சுற்றுலா தலங்களை நோக்கி படையெடுப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா இ.ஆ.ப

இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கன மழை பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் 18, 19, மற்றும் 20 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.

சாலையோரம் ஆபத்தான முறையில் உள்ள மரங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் வருவாய்த் துறையினர், மழைநீர் தேங்கக்கூடிய இடங்களை கண்டறிந்து அங்கிருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி

தீயணைப்பு துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும், தேவை ஏற்பட்டால் மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கனமழை எச்சரிக்கை காரணமாக வருகிற 18, 19, 20 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாவிற்கு வர வேண்டாம் என சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா அறிவுறுத்தியுள்ளார்.

மலைப்பாதையில் பயணிக்கும் வாகனங்கள் மிகுந்த கவனத்துடன் இயக்கப்பட வேண்டும் எனவும், கனமழை காலங்களில் வாகனத்தை இயக்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அறிவுறுத்தியுள்ளனர்.

x