கோவை அரசு மருத்துவமனையில் தனித்து விடப்படும் முதியவர்களை மீட்டு பராமரிக்கும் ‘ஹெல்பிங் ஹார்ட்ஸ்’


கோவை அரசு மருத்துவமனையில் தனித்துவிடப்பட்டு ‘ஹெல்பிங்ஹார் ட்ஸ்' அமைப்பினரால் மீட்கப்பட்ட மூதாட்டி.

கோவை: கோவை அரசு மருத்துவமனையில், வீட்டில் பராமரிக்க முடியாத நிலையில் உறவினர்களால் கொண்டு வந்து விடப்படும் முதியவர்கள் 7 பேரை மாதம்தோறும் மீட்டு ‘ஹெல்பிங் ஹார்ட்ஸ்' அமைப்பு பராமரித்து வருகிறது.

கோவை அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். மேலும், உடல்நலம் குன்றிய வயதானவர்களை வீட்டில் வைத்து பராமரிக்க முடியாதவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து விட்டு செல்லும் நிலை உள்ளது.

இதுபோல தனித்து விடப்படும் முதியவர்களை கணக்கெடுத்து அவர்களை ‘ஹெல்பிங் ஹார்ட்ஸ்’ என்ற தன்னார்வ அமைப்பினரிடம் ஒப்படைக்கும் பணியை மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து, அரசு மருத்துவமனை செவிலியர்கள் கூறும்போது, “மருத்துவமனையின் வார்டுகளில் ஆதரவற்ற நிலையில் விடப்படும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறியவர்களை ‘ஹெல்பிங் ஹார்ட்ஸ்’ அமைப்பு மூலம் காப்பகங்களுக்கு அனுப்பி வருகிறோம்.

ஆதரவற்ற நிலையில் வெளியே படுத்து உறங்குபவர்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து வருகிறோம். இதனால் மருத்துவமனையில் தனித்து விடப்படும் ஆதரவற்ற முதியவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது” என்றனர்.

‘ஹெல்பிங் ஹார்ட்ஸ்’தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த கணேஷ் கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனையில், வயதானவர்களை வீட்டில் வைத்து பராமரிக்க முடியாதவர்கள், இரவுநேரங்களில் அழைத்து வந்து தனியே விட்டு செல்கின்றனர்.

இதுபோன்று தனித்துவிடப்படும் முதியவர்கள் குறித்து அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவிக்கும். அதன்பேரில் வயதானவர்களை மீட்டு காப்பகங்களில் வைத்து பராமரித்து வருகிறோம்.

கோவை அரசு மருத்துவமனையைப் பொருத்தவரை மாதம் தோறும் 5 முதல் 7 பேர் வரை மீட்டு சென்று பராமரித்து வருகிறோம். மாநகரில் சாலையோரத்தில் ஆதரவற்ற நிலையில் உள்ள முதியவர்கள், மனநலம் பாதித்தவர்களையும் மீட்டு பராமரித்து வருகிறோம்.

‘ஹெல்பிங் ஹார்ட்ஸ்’ அமைப்பு சார்பில் கோவை மாவட்டத்தில் 7 காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 6 காப்பகங்கள் அரசு கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன. ஒரு காப்பகம் தனியார் பராமரிப்பில் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 15 ஆண்டுகளில் சுமார் ஆயிரம் முதியவர்களை மீட்டு பராமரித்துள்ளோம். 2023-ல் 176 பேரையும், 2022-ல் 186 பேரையும் மீட்டு பராமரித்தோம். கடந்த ஆண்டில் 80 பேரை அவர்களது குடும்பத்துடன் மீண்டும் சேர்த்து வைத்துள்ளோம்.

உடல்நலம் பாதித்த நிலையில் இருக்கும் 10 சதவீதம் பேர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்து விடுகின்றனர். அவர்களுக்கு இறுதி சடங்குகளை செய்து வருகிறோம். ஆதரவற்றோர் பற்றி தகவல் தெரிந்தவர்கள் 63747 13767 என்ற எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

x