கோவிஷீல்டு களேபரங்கள்... உயிர்காக்கும் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் பயமுறுத்தக் கூடியதா?


கோவிஷீல்டு கவலைகள்

கொரோனா பெருந்தொற்றிலிருந்து தடுப்பூசி மூலம் உயிர் தப்பியவர்கள், தற்போது கொரோனாவை மறந்துவிட்டு தடுப்பூசியின் தாக்கம் குறித்து கவலையோடு விவாதித்து வருகிறார்கள். இந்தியாவில் தயாராகி, பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்களின் உயிரைக் காப்பாற்றிய கோவிஷீல்டு என்ற தடுப்பூசி குறித்து சமூக ஊடகங்கள் முதல் அரசியல் பிரச்சார மேடைகள் வரை அனல் பறக்கிறது.

கோவிஷீல்டு குறித்தான இந்தியர்களின் கவலை உண்மையிலேயே அர்த்தம் உடையதா? கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அதன் பக்கவிளைவுகள் குறித்து கவலைகள் பொருட்படுத்தக்கூடியதா?

அபயக் கரமா, அபாயகரமா?

உலகை புரட்டிப்போட்ட பெருந்தொற்றின் தாக்கம் அத்தனை எளிதில் மறக்கக் கூடியதல்ல. சமகாலத்தில் உலகம் கண்ட பேரழிவு அபாயகரங்களில் ஒன்று கொரோனா. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் கொத்துக் கொத்தாக மக்கள் செத்து விழுந்தபோது ஊழிக்காலம் ஆரம்பித்து விட்டதாகவே மனித இனம் கலங்கித் தவித்தது. குடும்பம், நட்பு, உறவு என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சந்தடியின்றி செத்துப்போனார்கள். கடைசியாக ஒருமுறை அவர்களின் முகத்தைக்கூட பார்க்க வழியின்றி கொரோனா கட்டுப்பாடுகள் முடக்கிப்போட்டன.

உலகமெங்கும் ஒலித்த மரண ஓலங்கள் காதுகொடுத்து கேட்பதற்கில்லை. தனிமனிதர்கள் மட்டுமன்றி அரசுகளும், சர்வதேச சமூகங்களும் நம்பிக்கை இழந்துகொண்டிருந்தபோது, தடுப்பூசி என்ற அபயக்கரம் நீண்டது. வழக்கமான தடுப்பூசி ஆராய்ச்சிக்கு ஆண்டுக்கணக்கில் ஆகும் சூழலில், பெருந்தொற்றின் நெருக்கடி விரைவான தடுப்பூசிக்காக மருத்துவ ஆராய்ச்சியாளர்களை நெட்டித்தள்ளியது. கொரோனாவிலிருந்து பாதுகாப்பு, தொற்று ஏற்படாது தடுப்பது, சமூகப்பரவலை உடைப்பது என தடுப்பூசி வடிவில் கடவுளே மனமிரங்கியதாக மக்கள் உருகினார்கள். தடுப்பூசி தயாரித்த நிறுவனங்களை போற்றினார்கள்.

அடுத்த ஒரு சில வருடங்களில் கிட்டத்தட்ட பெருந்தொற்று அடையாளத்தை உலகம் கழுவிக் களைந்துவிட்டு, புதிய அரிதாரம் கண்டிருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக கொரோனா பரவல் அடையாளம் காணப்பட்டாலும் அவற்றை எவரும் பொருட்படுத்துவதில்லை. எல்லாம் தடுப்பூசிகளின் மகத்துவம் என்ற வெகுமக்களின் பிரமிப்பு திடீரென நீர்க்குமிழியாக உடைந்திருக்கிறது. உயிர்காத்த தடுப்பூசிகளே கண்ணி வெடியாக உடலுக்குள் குடியிருந்து, திடீரென உயிருக்கு ஆபத்தாக மாறும் விபரீதம் குறித்து மக்கள் விவாதிக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள்.

அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி தயாரிப்பு

அழுத்தத்தில் தள்ளிய தடுப்பூசி

”அப்பவே சொன்னேன் இல்லையா..?” என தடுப்பூசி எதிர்ப்பாளர்களும், நவீன அறிவியல் மருத்துவத்தை புறக்கணிப்பவர்களும் கிளர்ந்தெழுந்து இருக்கிறார்கள். பெரும்பாலான இந்தியர்கள் போட்டுக்கொண்ட கோவிஷீல்டு தடுப்பூசி, உடலில் ரத்தம் உறைதலை ஏற்படுத்தி, மாரடைப்பு முதல் பக்கவாதம் வரை வித்திடக்கூடும் என்ற அச்சுறுத்தல் பூதாகரமாக எழுந்திருக்கிறது. மருந்தின் மேற்படி பக்கவிளைவு குறித்த எச்சரிக்கையைவிட, அது குறித்தான பீதியில் மக்கள் மன அழுத்தம் முதல் ரத்த அழுத்தம் வரை ஆளாகி இருக்கிறார்கள்.

இங்கிலாந்தின் ஆஸ்ட்ராஜெனிகா என்ற மருந்து நிறுவனமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியே, இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் கோவிஷீல்டு என்ற பிராண்டில் தயாரிக்கப்பட்டது. இந்த ஆஸ்ட்ராஜெனிகா மருந்து நிறுவனத்துக்கு எதிராக, அதன் கொரோனா தடுப்பூசியால் பாதிப்பு கண்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என 50க்கும் மேற்பட்டோர் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையின்போது ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் சார்பில் தாக்கலான அறிக்கை, ‘டிடிஎஸ் என்ற பக்கவிளைவு’ குறித்த ஒப்புதல் வாக்குமூலமாக அமைந்தது

’த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம்’ என்பதன் சுருக்கமே டிடிஎஸ். ரத்தம் உறைதல் மற்றும் ரத்தத்தில் பிளேட்லெட் எனப்படும் தட்டணுக்களின் எண்ணிக்கையை குறையும் பாதிப்பு ஆகியவை, ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியின் அரிதான பக்கவிளைவாக நேரிடக் கூடும் என மருந்து நிறுவனமே ஒப்புக்கொண்டுள்ளது. இது இதர நாடுகளைவிட இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் என 2 தடுப்பூசிகளே தேசத்தின் தடுப்பூசி இயக்கத்தில் பெரும்பங்கு வகித்தன. இவற்றிலும் கோவிஷீல்டு தடுப்பூசியே ஒன்றுக்கும் மேற்பட்ட டோஸ்களின் மூலமாக, இதுவரை 175 கோடிக்கும் அதிகமான டோஸ்களில் இந்தியர்களின் ரத்தத்தில் கலந்திருக்கின்றன.

வரமாய் வந்த தடுப்பூசிகள்

கடந்த சில ஆண்டுகளாகவே மாரடைப்பு காரணமாக இறப்போர் அதிகரித்து வருகின்றனர். இந்த சாவுகளின் பின்னணியில் தடுப்பூசிகள் இருப்பதாக, அந்த தடுப்பூசிகள் புழக்கத்துக்கு வந்தது முதலே அதன் எதிர்ப்பாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். தற்போது தயாரிப்பு நிறுவனமே தங்கள் தடுப்பூசியின் பக்கவிளைவு குறித்து நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதில், இந்தியர்களின் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் கவலைகள் அனைத்தும் கோவிஷீல்ட் கணக்கில் ஏறின. உண்மையிலேயே இந்த அச்சுறுத்தல்கள் பொருட்படுத்தக் கூடியவையா என்பதை பொறுப்பாக விவாதிக்கும் பொறுமையையும் பலர் இழந்திருக்கின்றனர்.

வாட்ஸ் ஆப் வதந்திகளை வாசிக்கும்போது மெய்யாலும் இதயத்தின் படபடப்பு எகிறக்கூடும். வதந்திகள், பரபரப்புகளை அதிகம் நேசிக்கும் மக்களின் ஆவலாதிகள் இந்த சூழலில் மேலும் கூடியிருக்கின்றன. கொரோனா தடுப்பூசியை முன்வைத்து, ஒட்டுமொத்தமாக தடுப்பூசிகளுக்கு எதிராக மக்களை மடைமாற்றும் அவலமும் நிகழ்ந்து வருகிறது. உண்மையில் கடந்த 2 நூற்றாண்டுகளாக நவீன மருத்துவத்தில் தடுப்பூசிகள் நிகழ்த்தி வந்த மாற்றங்கள் அலாதியானவை.

கொள்ளை நோய்கள் முதல் பரம்பரை பாதிப்புகள் வரை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஆபத்பாந்தவனாக தடுப்பூசிகளும் இதர தடுப்பு மருந்துகளும் அதிசயங்களை நிகழ்த்தி வருகின்றன. அம்மை ரகங்கள் முதல் குழந்தைகளுக்கான பல்வேறு தடுப்பூசிகள் மூலமாக பெருந்தொற்றுகள் பலவற்றிலிருந்து விடுபட்டிருக்கிறோம்.

இரத்தத்தில் டிடிஎஸ் அபாயம்

காலாவதியாகும் பக்கவிளைவுகள்

உயிர்காக்கும் இந்த தடுப்பூசிகள் அனைத்துமே பக்கவிளைவு அபாயங்களுக்கு உட்பட்டவை. தடுப்பூசிகள் மட்டுமல்ல சாதாரண தலைவலி, உடல்வலி, காய்ச்சலுக்கான மருந்துகளும் கூட இந்த பக்கவிளைவுக்கு உட்பட்டவை. காய்ச்சல், உடல்வலிக்கு என நாம் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் பாராசிட்டமால் மாத்திரைகள், நமது கல்லீரலை காலி செய்யக்கூடியவை. அதனால்தான் மருத்துவர் பரிந்துரையின்றி உபயமாக இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது என்கிறோம். இப்படி சாதாரண மருந்து மாத்திரைகள் முதல் தடுப்பூசிகள் வரை, உடன் இணைக்கப்பட்ட குறிப்புகளில் அதன் பக்கவிளைவுகளை எச்சரிக்கவே செய்கின்றன.

இந்த வகையில் கொரோனா தடுப்பூசிகள் அறிமுகமானது முதலே அந்த மருந்து நிறுவனம் மட்டுமன்றி உலக சுகாதார நிறுவனம் வரை குறிப்பிட்ட தடுப்பூசிகளின் பக்கவிளைவுகளை எச்சரித்தே வந்துள்ளன. தற்போதைய இங்கிலாந்து வழக்கு விவகாரத்திலும் பழைய அறிக்கையையே மருந்து நிறுவனம் மீண்டும் சமர்பித்துள்ளது. அது இந்தியாவின் தேர்தல் பிரச்சார களேபரங்களுக்கு மத்தியில் பெரும் விவாதங்களை உருவாக்கி உள்ளன.

ஆஸ்ட்ராஜெனிகாவின் பக்கவிளைவுகள் மிகவும் அரிதானவை; புறக்கணிக்கும் அளவுக்கும் குறைவானவை. பத்துலட்சத்தில் 4 பேருக்கு மட்டுமே அதன் டிடிஎஸ் பக்கவிளைவுகள் வாய்ப்பாகக்கூடும். அப்படி பாதிப்பு கண்டவர்களுக்கும் கூட மிக அரிதாகவே மரணம் வரை அபாயங்கள் வாய்ப்பாகக்கூடும். இந்த பாதிப்பும் கூட தடுப்பூசி போட்டுக்கொண்ட 4-வது நாள் முதல் அதிகபட்சமாக 42 நாட்கள் வரையே செல்லுபடியாகும். அதன் பிறகு பக்கவிளைவு குறித்து கவலைகொள்ளத் தேவையில்லை என்கிறது ஆஸ்ட்ராஜெனிகா. ஆகவே, தடுப்பூசி போட்டுக்கொண்டு 3 வருடங்கள் கழித்து அதன் பக்கவிளைவுகள் குறித்த விசனங்கள் அர்த்தமற்றவை.

கொரோனா கண்டு மீண்டவர்களுக்கு எச்சரிக்கை

நிதர்சனத்தில், டிடிஎஸ் பாதிப்பு என்பது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை விட, கொரோனாவில் விழுந்து உயிர் பிழைத்தவர்களை அதிகம் பாதிக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. அவ்வாறு சுமார் 16 சதவீதத்தினருக்கு இந்த டிடிஎஸ் பாதிப்புக்கான சாத்தியங்கள் உண்டு. அதனால்தான், கொரோனா நோயிலிருந்து மீண்டவர்கள் கொரோனா காலத்துக்குப் பிந்தைய உடற்பயிற்சி, உடல் உழைப்பு ஆகியவற்றில் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய அரசே எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவை தவிர்த்தும் தற்காலத்தில் மோசமடைந்திருக்கும் உணவுமுறை, உடல் உழைப்பு இல்லாதது, உறக்கம் தவிர்ப்பது, சகலத்திலும் மன அழுத்தம் என ரத்தக்குழாய்களில் டிடிஎஸ் பாதிப்புகளை உருவாக்கும் உபாயங்கள் அதிகரித்து வருகின்றன. அவையே அதிக எண்ணிக்கையிலான மாரடைப்பு மற்றும் பக்கவாத பாதிப்புகளுக்கு வித்திடுகின்றன.

எனவே, கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், ஆண்டுகள் கழித்த பின்னர் அது குறித்தான கவலைக்கு அவசியமில்லை. கொரோனாவில் விழுந்து எழுந்தவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பதும், காலக்கிரமத்தில் முழுஉடல் பரிசோதனை மூலம் பாதிப்புகளை முன்கூட்டியே அறிவதும் அவசியம்.

கோவிஷீல்டு மட்டுமன்றி உயிர்காக்கும் தடுப்பூசிகள் அனைத்துமே பக்கவிளைவுகளுக்கு உட்பட்டவை. மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில் அவற்றை போட்டுக்கொள்வது குறித்து தனிநபர் அல்லது அவர்களின் குடும்பத்தினர் முடிவெடுக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக தடுப்பூசிகளை புறக்கணிப்பதும், பீதியை உண்டாக்க முயல்வதும் நம்மை சில நூற்றாண்டுகளுக்கு பின்னிழுக்கவே செய்யும்.

கோவிட் தடுப்பூசி

நம்பிக்கை இழக்காதிருப்போம்

சீரம் நிறுவனத்தை முன்வைத்தும், மக்களவைத் தேர்தல் பிரச்சாரங்களிலும், கோவிஷீல்டு தடுப்பூசியை மையமாகக் கொண்ட பீதி வெவ்வேறு வடிவங்களில் எழுப்பப்படுகின்றன. சீரம் நிறுவனம் தேர்தல் பத்திரம் வாயிலாக கணிசமான கோடிகளை பாஜகவுக்கு அள்ளித்தந்திருக்கிறது. தடுப்பூசிகளை இந்தியாவில் மட்டுமன்றி உலகம் முழுமைக்குமே ஏற்றுமதி செய்ததில், சீரம் நிறுவனம் கொள்ளை லாபம் பார்த்திருக்கிறது. அப்படி வருமானம் ஈட்டியதில் கொஞ்சத்தை ஆளும்கட்சிக்கு என தேர்தல் நிதியாக அள்ளித் தந்திருக்கலாம். இந்தப் புகார்கள் தனியாக விவாதிக்க வேண்டியவை. தடுப்பூசிகளுக்கு எதிரான சர்ச்சையில் இவற்றை முடிச்சிடத் தேவையில்லை.

அதே போன்று மக்களவைத் தேர்தல் பிரச்சார மேடைகளிலும் கோவிஷீல்டு தடுப்பூசியைக் கொண்டு பரஸ்பரம் அரசியல் கட்சிகள் பதம் பார்த்து வருகின்றன. மக்களின் உயிர்காக்கும் தடுப்பூசிக்கு விலை நிர்ணயித்த மத்திய அரசு, நீதிமன்றத்தில் குட்டு வாங்கியதும் அந்த தடுப்பூசிகளை இலவசமாக வழங்க முன்வந்தது. கையோடு அதனை ஆளும்கட்சியின் சாதனையாகவும் அரசியல் ஆதாயம் பார்க்க ஆரம்பித்தார்கள்.

உலகளவில் முன்னணி வகித்த சீரம் தடுப்பூசி நிறுவனத்தின் சாதனையை, பாஜக அரசு தனது சாதனையாக மாற்றியது. இந்த வகையில் தடுப்பூசி சான்று வழங்கும் தளத்திலும், படிவத்திலும் பிரதமர் மோடி படத்தை சேர்த்தவர்கள், தற்போது கோவிஷீல்டுக்கு எதிரான சர்ச்சை அதிகரித்ததும் அந்த படங்களை அவசரமாக நீக்கியிருக்கிறார்கள்.

கோவிஷீல்டு தடுப்பூசியை முன்வைத்து ஆளும் கட்சி மட்டுமன்றி எதிர்க்கட்சிகளும் அநாகரிக அரசியலை கையில் எடுத்துள்ளன. ’கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்’ என்ற சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் கோரிக்கை இந்த வகையில் சேரும்.

அரிதான பக்கவிளைவுக்கு ஆளானவர்கள் இங்கிலாந்து முதல் இந்தியா வரை நீதிமன்றங்களை நாட ஆரம்பித்துள்ளனர். தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்புக்கும் இந்த வழக்குகள் உதவக்கூடும். எனவே, அரசியலுக்கு அப்பால் தடுப்பூசிகள் விஷயத்தில் பொதுஜனம் நம்பிக்கை இழக்காதிருப்பதே நலம்!

x