தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க முடியாது... தொடர்ந்து கறார் காட்டும் கர்நாடக அரசு!


காவிரி நீர் திறப்பு - கிருஷ்ணராஜ சாகர் அணை

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர் திறக்க முடியாது என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது கூட்டத்தில் கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. குழு தலைவர் வினீத் குப்தா தலைமையிலான கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வைத்த வாதத்தில், ‘ஜூன் 1 2023 முதல் ஏப்ரல் 28, 2024 வரை அதாவது நேற்று முன்தினம் வரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 174 டிஎம்சி தண்ணீரை தர வேண்டும். ஆனால் வெறும் 75 டிஎம்சி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. சுமார் 95 டிஎம்சி தண்ணீர் தரவேண்டியது நிலுவையில் இருக்கிறது.

கிருஷ்ணராஜ சாகர் அணை

இது தவிர பிப்ரவரி மாதத்தில் இருந்து வருகிற 28 ம் தேதி வரை சுமார் 7.3 டிஎம்சி அளவு தண்ணீரை சுற்றுச்சூழல் நீராக கர்நாடகா தந்திருக்க வேண்டும். ஆனால் வெறும் 2 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கிடைக்கப்பெற்று இருப்பதாகவும், 5.3 டிஎம்சி தண்ணீர் குறைத்து தந்திருக்கிறது’ என தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கர்நாடக அரசு வைத்த வாதத்தில், ‘கர்நாடகவில் உள்ள 4 முக்கிய அணைகளில் உள்ள நீர், இங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டுமே உள்ளது. இதனால் மேலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீரை திறக்க முடியாது’ என்று திட்டவட்டமாக கூறியது".

காவிரி

இதனைத் தொடர்ந்து, கர்நாடகா அரசு மே மாதத்திற்கான சுற்றுச்சூழல் நீரின் அளவான 2.5 டிஎம்சி தண்ணீரை உச்ச நீதிமன்றத்தின் ஆணையின் படி தமிழகத்திற்கு திறந்துவிடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியது.

அப்போது தமிழக அரசு சார்பில், தமிழகத்துக்கு கர்நாடகா வழங்க வேண்டிய பாக்கியான 5.3 டிஎம்சி தண்ணீரையும் திறந்து விட வேண்டும் என்று கேட்கப்பட்டது. ஆனால் இதற்கு உத்தரவிட காவிரி ஒழுங்காற்று குழு மறுத்துவிட்டது.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அரசு உஷார்... கேரளாவில் வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல் பரவல்!

பழிக்குப்பழி... திருச்சியில் பிரபல ரவுடி முத்துக்குமார் பட்டப்பகலில் படுகொலை!

x