கேரளாவில் பறவைக் காய்ச்சல் நோய் கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
கேரளாவில் ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வந்த வாத்து பண்ணைகளில் அடுத்தடுத்து பறவைகள் உயிரிழந்தன. இவற்றின் உடல்களை பரிசோதனை செய்த போது எச்1என்1 எனப்படும் பறவைக் காய்ச்சல் நோய் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஆயிரக்கணக்கான வாத்துகள் மற்றும் கோழிகளை அழிப்பதற்கு கேரள மாநில அரசு உத்தரவிட்டது. இதனிடையே கேரள மாநிலத்தில் அதிகரித்து வரும் பறவைக் காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கேரளாவிலிருந்து வரும் கோழி மற்றும் பறவைகளை ஏற்றி வரும் வாகனங்கள், தீவிர கண்காணிப்புக்குப் பிறகே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. கால்நடைத் துறை சார்பில் கேரளா மாநில எல்லையோர பகுதிகளில் வாகனங்களுக்கு கிருமி நாசினிகள் தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், தமிழகத்திலிருந்து கோழி தீவனங்கள், கோழி முட்டைகள், இறைச்சி ஆகியவற்றை எடுத்துச் சென்று, கேரளாவில் இறக்கிவிட்டு மீண்டும் தமிழ்நாட்டிற்கு வரும் வாகனங்கள், கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
இதனிடையே கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோழிகளின் கழிவு மற்றும் பறவைக் காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்ட பிற பறவைகளின் கழிவுகளில் இருந்து மனிதர்களுக்கு இந்நோய் எளிதாக பரவும் என கண்டறியப்பட்டுள்ளது. காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, இருமல், மூச்சுத் திணறல், போன்றவை இந்த நோய்களின் அறிகுறிகள் ஆகும். கேரளாவில் நோய்ப் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி மாவட்ட சுகாதார இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. முக்கியமாக, கேரள மாநிலத்திலிருந்து கோழிக் கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களை அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நோய்த் தொற்று அறிகுறிகள் உள்ள மக்களை கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது சுகாதார இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனி நபர் சுகாதாரம் பேணுதல், கை கழுவுதல், முகக் கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கையாள வேண்டுமெனவும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
ஈரோடு ஸ்டிராங் ரூமில் மீண்டும் பிரச்சினை... டிஜிட்டல் திரை கோளாறால் அரசியல் கட்சியினரிடையே பரபரப்பு