மருந்து தட்டுப்பாடு அதிகரிப்பு: கேரளாவில் நோயாளிகள் கடும் அவதி!


மாத்திரைகள்

கேரளா மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கேரளா மாநிலத்தில் கடந்து சில நாட்களாக அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் அரசு மருத்துவமனையில் உள்ள மருந்தகங்களில் கிடைப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த மருந்துகளை வெளியில் வாங்கும்போது அதிக விலைக்கு வாங்க வேண்டிய நிலை இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மாத்திரைகள்

இதனால் ஏழை எளிய மக்கள் மருந்துகளை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நேற்று முன்தினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற நோயாளி ஒருவருக்கு 9 வகையான மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் அதில் 6 மருந்துகள் அரசு மருத்துவமனை மருந்தகத்தில் கிடைக்கவில்லை என செய்திகள் வெளியானது.

மேலும் மாநில அரசு சுமார் 500 கோடி ரூபாய் அளவிற்கு மருந்து நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகை வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் கடந்த ஆண்டு 200 கோடி ரூபாயும், இந்த ஆண்டு 300 கோடி ரூபாயும் வழங்க வேண்டியுள்ளது. இது தொடர்பாக பலமுறை நிதித்துறைக்கு சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ள போதும் மாநிலத்தில் நிலவும் நிதி பற்றாக்குறை காரணமாக இந்த தொகையை விடுவிப்பதில் சிக்கல் எழுந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், சம்பந்தப்பட்ட நோயாளிக்கு பரிந்துரைக்கப்பட்ட அனைத்து மருந்துகளும் மருத்துவமனையில் இருந்ததாகவும், சில நேரங்களில் மிக அத்தியாவசிய மருந்துகள் வெளியில் வாங்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பரிந்துரைக்கப்படும் மருந்துகள் அரசு மருத்துவமனை மருந்தகங்களில் கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைக்கும் போது அவற்றின் ரசாயனப் பெயர்களையும் எழுதுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த மருந்து பற்றாக்குறை பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இணை நோய்களான சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றிற்கான மருந்துகள் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


ரொக்கம் கிடையாது... அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!

x