அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மறுக்கும் மருத்துவர்களின் அணுகுமுறை பாராட்டத்தக்கதல்ல... உயர் நீதிமன்றம் அதிருப்தி!


மருத்துவர்கள்

மருத்துவ மேற்படிப்பை முடித்த பின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மறுக்கும் மருத்துவர்களின் அணுகுமுறை பாராட்டத்தக்கதல்ல என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

மருத்துவ மேற்படிப்பில் சேரும் மாணவர்கள், படிப்பு முடிந்த பின், இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதன்படி, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்களாக பணியாற்றும் பிரியங்கா, பரத்ஜி பாபு, அம்பிகா ஆகியோர் கொரோனா காலத்தில் தாங்கள் ஆற்றிய பணியையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, தங்களை விடுவிக்கக் கோரியும், சான்றிதழ்களை திரும்பத்தரக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்

கோப்புப்படம்

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் பரிசீலித்துள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், கொரோனா காலம் என்பது அவசரகாலம் என்பதால், மருத்துவ மேற்படிப்பு படித்துக் கொண்டிருப்பவர்களும் கொரோனா பணியாற்ற வேண்டும் எனவும், இவர்களுக்கு சலுகை வழங்குவதாக அரசு தெரிவிக்கவில்லை என அரசுத்தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்,"மேற்படிப்பில் சேரும் போது, நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு உத்தரவாத பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளதால், பயிற்சி காலத்தை குறைக்க வேண்டும் என சலுகை கோர முடியாது. நியமன உத்தரவின்படி, பயிற்சி காலத்தை முடிக்க வேண்டும்" எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றம்

மேலும், "சிறப்பு நிபுணத்துவ படிப்புகளை படிக்கும் மருத்துவர்களுக்கு அரசு பெருந்தொகையை செலவிடுகிறது. படிப்பை முடித்த பின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மறுப்பது, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை மக்களின் அடிப்படை உரிமையை பாதிக்கும் செயல். மருத்துவர்களின் இந்த அணுகுமுறை பாராட்டத்தக்கதல்ல" என்று நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

x