இறந்த கணவரின் விந்தணு... சட்டப் போராட்டம் நடத்தி மீட்டார் 62 வயது மனைவி


ஆண் உயிரணு

இறந்த கணவரின் விந்தணுவை சட்டப் போராட்டம் நடத்தி பெற்றிருக்கிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 62 வயது பெண்மணி. 2 வாரிசுகள் மற்றும் கணவரை இழந்த துயரத்தில் அவர் மேற்கொள்ளும் சட்ட மற்றும் மருத்துவப் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் குடிமக்கள் தனியுரிமை மற்றும் சட்ட அடிப்படையிலான காரணங்களுக்காக 62 வயது பெண்மணியின் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் பொதுவில் வெளியாகவில்லை. ஆனால், அதிகம் அறியப்படாத முன்மாதிரி சம்பவம் என்பதால், ஊடகங்களில் இது குறித்தான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. 2023-ல் 60 வயதினை கடந்த ஆஸ்திரேலிய தம்பதிக்கு, முன்னதாக 2 வாரிசுகள் இருந்தனர். அவர்கள் இருவருமே கடந்த வருடங்களில் பரிதாபமாக இறந்து போனார்கள்.

மருத்துவமனையில் பாதுகாக்கப்படும் உயிரணுக்கள்

29 வயதாகும் மகள் 2017-ல் மீன்பிடி சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் கடலில் மூழ்கி இறந்து போனார். 2019-ல் 31 வயது மகன் கார் விபத்தில் கொல்லப்பட்டார். வாரிசுகள் இருவரையும் இழந்த தம்பதி நிர்க்கதியாக தவித்தனர். சில ஆண்டுகள் கழிந்து சோகத்திலிருந்து மீண்டவர்கள், வாரிசுக்கான தேவையை உணர்ந்தார்கள். ஆனால் 60 வயதுகளை கடந்த தங்களால் மகப்பேறு கனவை எட்ட முடியுமா என தயங்கினார்கள். மருத்துவப் பரிசோதனை அடிப்படையில், கணவரின் விந்தணுவை பயன்படுத்தி வாடகைத் தாயார் மூலம் புதிய வாரிசை உருவாக்க முடிவு செய்தார்கள்.

ஆனால் அதற்குள் அடுத்த சோகம் அவர்கள் குடும்பத்தை தாக்கியது. டிசம்பர் 17 அன்று 61 வயதாகும் கணவர் திடீரென இறந்து போனார். இடிந்துபோன அவரது மனைவி, கணவரின் விந்தணுவை சேகரித்து பாதுகாக்குமாறு மருத்துவமனை உதவியை கோரினார். ஆனால் சடலத்திடம் இருந்து உயிரணுவை சேகரிக்க நீதிமன்ற அனுமதி வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் கைவிரித்தனர். உடனடியாக இதுகுறித்து நீதிமன்றத்தில் அப்பெண் முறையிட்டார்.

நீதிமன்ற உத்தரவு

மருத்துவ அடிப்படையில், ஒரு ஆண் இறந்த ஓரிரு நாளில் அவரது உடலில் இருந்து உயிரணுவை சேகரித்தால் மட்டுமே அதனால் பயன் உண்டு. மருத்துவ அவசரத்தை உணர்ந்த ஆஸ்திரேலிய நீதிமன்றம் கணவர் சடலத்திலிருந்து உயிரணுவை சேகரித்து மருத்துவமனை பாதுகாப்பில் வைக்க உத்தரவிட்டது. ஆனால், மற்றுமொரு முறை தனி நீதிமன்றத்தில் முறையிட்ட பிறகே, அவற்றை மனைவியால் பெற்று பயன்படுத்த முடியும் என்று நிபந்தனையும் விதித்தது.

அதன்படி வெற்றிகரமாக கணவன் சடலத்திலிருந்து விந்தணுவை மீட்டு மருத்துவனையில் பாதுகாக்கச் செய்திருக்கிறார் 62 வயது மனைவி. பின்னர் அடுத்த சுற்று சட்டப்போராட்டம் நடத்தி அந்த விந்தணுவை பயன்படுத்தி வாடகைத் தாய் உதவியுடன், தனக்கான வாரிசினை பெறும் மருத்துவப் போராட்டத்திலும் இறங்க இருக்கிறார். குடும்பத்தில் அனைவரையும் இழந்து நிர்க்கதியான அப்பெண்மணிக்கு வேறு வழியும் தெரியவில்லை.

x