புத்தாண்டில் நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி தந்த டென்மார்க் ராணி... முடிதுறப்பு அறிவிப்பை வெளியிட்டார்


பட்டத்து இளவரசரான மகன் பிரெடிரிக் மற்றும் மருமகளுடன் டென்மார்க் ராணி மார்கிரேத் 2

டென்மார்க் ராணியான இரண்டாம் மார்கிரேத் தனது புத்தாண்டு செய்தியாக, அரியணை துறப்பு அறிவிப்பை வெளியிட்டு நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் அரச பரம்பரை வழக்கிலுள்ள வெகு சில நாடுகளில் டென்மார்க்கும் ஒன்று. 52 ஆண்டுகளாக அரியணையில் வீற்றிருக்கும் மார்கிரேத் 2, தனது உடல் நிலையை கருத்தில் கொண்டும், மகனுக்கு வழிவிடும் வகையிலும், ராணி பட்டத்தை துறப்பதாக அறிவித்திருக்கிறார். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவினை அடுத்து, ஐரோப்பாவில் நீண்ட காலம் அரியணையில் வீற்றிருக்கும் ராணியாக டென்மார்க்கின் மார்கிரேத் 2 புகழ் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து ராணி எலிசபெத் 2 உடன் டென்மார்க் ராணி மார்கிரேத் 2

தனது தந்தை ஒன்பதாம் பிரெடிரிக் மறைவை அடுத்து 1972-ல் டென்மார்க் ராணியாக இவர் முடிசூடப்பட்டார். டெய்சி என்ற பூர்வாசிரமப் பெயர் கொண்ட இவர், 14-ம் நூற்றாண்டில் டென்மார்க் ராணியாக முடிசூடப்பட்டும், பிற்போக்கு காரணமாக ராணிக்கான அங்கீகாரம் வழங்கப்படாத மார்கிரேத் என்ற தனது மூதாதையரின் பெயரை சூடிக்கொண்டார். இரண்டாம் மார்கிரேத்தை வரவேற்கும் வகையில், நவீன டென்மார்க் தனது பிற்போக்கினை உதறி, பெண்களும் அரசாளலாம் என்று 1953-ல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது.

நாட்டின் ராணியாக அரை நூற்றாண்டுக்கும் மேலாக டென்மார்க்கை ஆண்ட போதும், அரசியல் விவகாரங்களில் தலையிடாது இரண்டாம் மார்கிரேத் கண்ணியம் காத்தார். ஆங்கிலம், பிரெஞ்சு உட்பட 4 மொழிகளில் வல்லவர், கலைப்பொருட்கள் சேகரிப்பில் ஆர்வம் மிக்கவர், நாட்டின் இக்கட்டான தருணங்களில் புன்னகை மாறா முகத்துடன் மக்களிடம் நம்பிக்கை விதைத்தவர் என டென்மார்க் மக்கள் மத்தியில் மார்கிரேட் வரவேற்பு பெற்றுள்ளார்.

டென்மார்க் ராணி மார்கிரேத் 2

ஆனபோதும் செயின் ஸ்மோக்கிங், தன்னை மன்னராக அங்கீகரிக்காததில் நாட்டைவிட்டே வெளியேறிய கணவர், மன்னராட்சியை விரும்பாத கணிசமான டென்மார்க் மக்கள் என அவ்வப்போது சர்ச்சைக்கும் ஆளாகி இருக்கிறார். கடந்த பிப்ரவரியில் முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொண்டது முதலே அவதிப்பட்டு வந்த மார்கிரேத் 2, தனது 82வது வயதில் எதிர்வரும் ஜனவரி 14 அன்று டென்மார்க் ராணி மகுடத்தை துறப்பதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது 2 மகன்களில் பட்டத்து இளவரசரான பிரெடிரிக், டென்மார்க்கின் புதிய மன்னராக பொறுப்பேற்பார்.

இதையும் வாசிக்கலாமே...

x