ராணி வேலுநாச்சியார் காட்டிய வீரமும் தைரியமும் இன்றும் ஊக்கமளிக்கிறது - பிரதமர் மோடி பெருமிதம்!


பிரதமர் நரேந்திர மோடி

ஆங்கிலேயர்களுக்கு எதிராக ராணி வேலு நாச்சியார் காட்டிய வீரமும் தைரியமும் அனைவருக்கும் இன்றும் ஊக்கமளிக்கும். படையில் முதன்முறையாக மகளிர் குழுவை உருவாக்கியவர்களில் ராணி வேலுநாச்சியாரின் பெயர் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் கடைசி மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, "ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நம் பாரத பூமியை சாதனை பெண்கள் பெருமைப்படுத்தி உள்ளனர். சாவித்ரிபாய் புலேயும், ராணி வேலுநாச்சியாரும் நாட்டின் முக்கியமான பெண்கள். சாவித்ரிபாய் புலே பெயரை கேட்டதும், கல்வி மற்றும் சமூக சீர்திருத்தத்தில் அவர் ஆற்றிய பங்கு தான் நமக்கு நினைவுக்கு வரும். பெண்கள் மற்றும் சமுதாயத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். தவறான நடைமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். கல்வி மூலம் சமுதாயத்தை அதிகாரம் பெற செய்ய முடியும் என முழுமையாக நம்பினார். மஹாத்மா ஜோதிராவ் கோவிந்தராவ் புலே உடன் இணைந்து பெண்களுக்காக பள்ளிகளை திறந்தார். அவர் இயற்றிய கவிதைகள் மக்கள் மத்தியில் தன்னம்பிக்கை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

அந்நிய ஆட்சிக்கு எதிராகப் போராடிய, தேசத்தின் பல மகத்தான ஆளுமைகளில் இராணி வேலு நாச்சியாரும் ஒருவர். தமிழகத்தில் உள்ள என் சகோதர, சகோதரிகள் இன்னும் அவரை வீரமங்கை என்ற பெயரில் நினைவு கூருகிறார்கள். ஆங்கிலேயர்களுக்கு எதிராக ராணி வேலு நாச்சியார் காட்டிய வீரமும் தைரியமும் அனைவருக்கும் இன்றும் ஊக்கமளிக்கும். ஆங்கிலேயர்கள் தமிழகத்தின் சிவகங்கை சமஸ்தானத்தின் மீது போர் தொடுத்த போது, அந்தப் பகுதியின் அரசராக விளங்கிய வேலு நாச்சியார் அவர்கள் கணவர் கொலை செய்யப்பட்டார் இராணி வேலு நாச்சியாரும் அவருடைய மகளும் எப்படியோ எதிரிகளிடமிருந்து தப்பினார்கள்.

பிறகு முழுத் தயாரிப்போடு, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போர் புரிந்தார். மிகவும் நெஞ்சுரத்தோடும் உறுதிப்பாட்டு சக்தியோடும் போரிட்டார்.ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில், மருது சகோதரர்கள், அதாவது தனது தளபதிகளோடு இணைந்து ஒரு படையை உருவாக்கி, பல ஆண்டுகள் வரை அதை வலுப்படுத்தினார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் தொடுத்தார். மிகப்பெரிய தைரியத்துடன் போரிட்டார். படையில் முதன்முறையாக மகளிர் குழுவை உருவாக்கியவர்களில் ராணி வேலுநாச்சியாரின் பெயர் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. இந்த இரண்டு துணிச்சலான பெண்களுக்கு எனது அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்தார்

x