“ஒடிசாவில் பனை ஓலை கலைக்கு வித்திட்டது தமிழர்களே!” - பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்


மதுரை: “சோழ மன்னர்கள் காலத்தில் ஒடிசாவுக்கு சென்ற தமிழர்கள்தான் இன்றளவும் அங்கு பனை மரம் வளர்க்கின்றனர். பனை ஓலை கலைக்கு வித்திட்டவர்கள். அத்தகைய ஒடிசா பனை ஓலை கலைஞர்கள் மூலம் பனை ஓலை ஓவியங்கள் மீண்டும் தமிழகத்துக்கு வந்துள்ளது” என பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசினார்.

மதுரை சிக்கந்தர் சாவடியிலுள்ள வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கம், மிராக்கிள்ட்ரீ லைஃப் சயின்ஸ் சார்பில் பனை ஓலையில் உயிர் ஓவியக் கண்காட்சி 5 நாள் கண்காட்சி தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று ஒடிசா பனை ஓலை கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இதற்கு வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.ரத்தினவேல் தலைமை வகித்தார். மிராக்கிள்ட்ரீ லைஃப் சயின்ஸ் நிறுவனர் ஆர்.சரவணகுமரன் முன்னிலை வகித்தார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்,ஒடிசா பனை ஓலை கலைஞர்களை பாராட்டி பேசினார். அப்போது அவர் பேசியது: “பனை ஓலைச்சுவடிகள் இருந்த திருக்குறள் மற்றும் பல்வேறு தமிழ் இலக்கியங்கள் இன்றைய தலைமுறைக்கு கிடைக்க காரணம் பனை ஓலைதான். தமிழ் மொழி இலக்கியங்கள் பாதுகாக்கப்பட்டது பனை ஓலையில்தான்.

சோழர் மன்னர்கள் கலிங்க நாட்டின் மீது போர் தொடுத்து வெற்றிக்கொடி நாட்டினர், கலிங்கத்துப்பரணியும் பாடினர். தற்போதைய ஒடிசாதான் சோழர்கள் வெற்றிக்கொடி நாட்டிய கலிங்க நாடு. அக்காலத்திலேயே இங்கிருந்து போன தமிழர்கள்தான் இன்றளவும் ஒடிசாவில் பனைமரம் வளர்க்கின்றனர்.

பனை ஓலை கலைக்கு வித்திட்டவர்கள் தமிழர்கள். பனை ஓலையில் பல்வேறு கலைகளை வளர்த்தனர். அத்தகைய ஒடிசா பனை ஓலை கலைஞர்கள் மூலம் மீண்டும் தற்போது தமிழகத்துக்கு பனை ஓவியங்கள் வந்துள்ளது. பனை மரங்கள் பல்வேறு பல்வேறு பயன்களை கொடுப்பதால்தான் தமிழகத்தில் இன்றளவும் கிராமங்களில் சாமியாக வழிபடுகின்றனர்” என்றார்.

x