பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.14.60 நிர்ணயம் - இந்திய தேயிலை வாரியம் அறிவிப்பு


நீலகிரி தேயிலை தோட்டங்கள்

நீலகிரி மாவட்டத்தில் விளையும் பசுந்தேயிலைக்கு செப்டம்பர் மாத விலையாக கிலோவுக்கு 14 ரூபாய் 60 காசுகள் என நிர்ணயம் செய்து இந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் முக்கிய விவசாய தொழிலாக தேயிலை விவசாயம் இருந்து வருகிறது. சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு பறிக்கப்படும் பசுந்தேயிலையை விவசாயிகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கடந்த கொரோனா காலகட்டத்தில் ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு 30 ரூபாய்க்கும் மேலாக விலை கிடைத்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு கிலோ தேயிலை 10 முதல் 12 ரூபாய் வரை என கடும் விலை வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் தேயிலை விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே தேயிலைக்கு கட்டுபடியாகும் விலையை நிர்ணயிக்க கோரி தேயிலை விவசாயிகள் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

நீலகிரி தேயிலை தோட்டங்கள்

இதனிடையே இந்திய தேயிலை வாரியம் சார்பில் ஒவ்வொரு மாத இறுதியிலும், அம்மாதத்தில் கொள்முதல் செய்யப்பட்ட தேயிலைக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான கொள்முதல் விலையாக ஒரு கிலோவுக்கு 14 ரூபாய் 60 காசுகள் என நிர்ணயித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொகை விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் வாரியம், தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் என தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x