மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி... டெண்டர் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!


எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடம்

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி தொடர்பான டெண்டர் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மதுரை அருகே தோப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோ.புதுப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட 2019 ஜனவரி 27-ம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால், இதுவரை எந்தப்பணியும் தொடங்கப்படவில்லை.

இதனால் பணிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது. இந்த நிலையில் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடமிருந்து நிதி கிடைத்ததை அடுத்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக 18-ம் தேதி வரை ஒப்பந்த விண்ணப்பம் கோரப்பட்டது.

அதில் 870 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சிகிச்சை மையம், 30 படுக்கையுடன் கூடிய ஆயுர்வேத சிகிச்சைக்கான அறை, 150 எம்பிபிஎஸ் மாணவர்கள், செவிலியர்கள் படிக்கக்கூடிய வகுப்பறைகள், மாணவர்களுக்கான விடுதிகள், இயக்குநர்களுக்கான தங்கும் இல்லம், பணியாளர்களுக்கான குடியிருப்புகள், வணிக வளாகம் ஆகியவை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இதனை இரு கட்டங்களாக 33 மாதத்தில் முடிப்பதற்கு நிபந்தனை கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு விண்ணப்ப கால அவகாசம் அக்டோபர் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

x