தொடர் விடுமுறை... பயணிகள் வசதிக்காக 1500 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு முடிவு!


பேருந்துகள்

நாளை (செப்.28) முதல் திங்கட்கிழமை வரை தொடர் விடுமுறை என்பதால் பயணிகளின் வசதிக்காக 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மிலாடி நபியை முன்னிட்டு அரசு விடுமுறை நாளாகும். சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை நாளோடு அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியும் வருவதால் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் அரசு விடுமுறையாகும்.

மேலும் வியாழக்கிழமைக்கு மறுநாள் 29- ம் தேதி வெள்ளியன்று விடுப்பு போட்டால் 5 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்கும். தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டதால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அனைத்து ரயில்களில் இடங்கள் நிரம்பிவிட்டன. தென் மாவட்ட பகுதிகள், கோவை மார்க்கமாக செல்லக்கூடிய ரயில்களில் 5 நாட்களுக்கு எந்த வகுப்பிலும் இடங்கள் இல்லை.அரசு, ஆம்னி பஸ்களில் முன்பதிவு அதிகரித்துள்ளது. இன்று இரவு பயணம் செய்ய பெரும்பாலான இடங்கள் நிரம்பியுள்ளன.

வெளியூர் பயணம் அதிகரிப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளை முதல் 30-ம் தேதி வரை சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன.

பேருந்துகள்

வழக்கமாக தினமும் இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் கூடுதலாக தினமும் 500 பஸ்கள் வீதம் 3 நாட்களுக்கு 1500 பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல 28 மற்றும் 29-ம் தேதிகளில் பயணம் செய்ய 40 ஆயிரம் பேர் வரை முன் பதிவு செய்துள்ளனர்.

இதேபோல 2-ம் தேதி திங்கட்கிழமை பல்வேறு நகரங்களில் இருந்து சென்னை திரும்புவதற்கும் கூடுதலாக 1000 பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து சென்னை வருவதற்கு அரசு விரைவு பேருந்துகளில் 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து காத்து இருக்கிறார்கள்.

அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம், சேலம், மதுரை, திருநெல்வேலி, கும்பகோணம் ஆகிய போக்குவரத்து கழகங்கள் மூலம் தேவையான பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

x