அதிர்ச்சி... ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 10 புலிகள் மரணம்; நீலகிரியில் நீடிக்கும் மர்மம்!


இந்தியாவின் தேசிய விலங்கு என புலிகளைப் பாதுகாக்க தனி சட்டம் இயற்றி, பாதுகாத்து வருகிறோம். அதே சமயம் அடுத்தடுத்து புலிகள் நீலகிரி மாவட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 35 நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் 10 புலிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தேசிய புலிகள் ஆணைய குற்ற பிரிவு ஐஜி முரளிகுமார், மத்திய வன விலங்கு குற்ற தடுப்பு பிரிவு தென் மண்டல இயக்குநர் கிருபா சங்கர், மத்திய வன விலங்கு ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி ரமேஷ் கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்டோர் உதகையில் விசாரணை மேற்கொண்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் 6 புலி குட்டிகள் உள்பட 10 புலிகள் இறந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி சீகூர் பகுதியில் 2 புலி குட்டிகள் மர்மமாக இறந்துள்ளது. அதேபோல ஆகஸ்ட் 17-ம் தேதி நடுவட்டம் பகுதியில் 1 புலியும், ஆகஸ்ட் 31ம் தேதி முதுலையில் ஒரு புலியும், செப்டம்பர் 9-ம் தேதி அவலாஞ்சி பகுதியில் 2 புலிகளும், செப்டம்பர் 17-ம் தேதி சின்ன குன்னூரில் ஒரு புலி குட்டியும், செப்டம்பர் 19-ம் தேதி 3 புலி குட்டிகளும் இறந்துள்ளது.

தேசிய புலிகள் ஆணைய குற்ற பிரிவு ஐஜி முரளிகுமார் நீலகிரியில் விசாரணை

இதனிடையே புலிகள் காப்பகமான முதுமலையில் புலிகள் தொடர்ந்து உயிரிழப்பது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தாய் புலி தனது குட்டிகளை விட்டு 200 மீட்டர் தூரம் கூட விலகி போகாது எனும் நிலையில் இறந்த புலி குட்டிகளின் தாய் புலிகளை இதுவரை வனத்துறையினர் கண்டுபிடிக்கவில்லை. இதனால் தாய் புலிகள் வேட்டையாடப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 35 நாட்களில் 10 புலிகள் மர்மமான முறையில் உயிர் இழந்தது குறித்து விசாரிக்க தேசிய புலிகள் ஆணைய குற்ற பிரிவு ஐஜி முரளிகுமார், மத்திய வன விலங்கு குற்ற தடுப்பு பிரிவு தென் மண்டல இயக்குநர் கிருபா சங்கர், மத்திய வன விலங்கு ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி ரமேஷ் கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்டோர் உதகையில் விசாரணை நடத்தினர். 6 குட்டி புலிகள் உள்ளிட்ட 10 புலிகள் உயிரிழந்தது எப்படி, அதற்கான காரணம், நீலகிரி மாவட்ட வன பகுதியில் இந்த ஆண்டில் இறந்துள்ள மொத்த புலிகள் இறப்பிற்கான காரணங்கள் குறித்து விசாரிக்க உள்ளனர். அதிகாரிகளிடம் விசாரணை முடிந்த பின்னர் சின்னகுன்னூர் பகுதியில் 4 புலி குட்டிகள் இறந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

x