அடடா... உலகத்திலேயே இந்தியாவில் தான் இப்படி பணியாற்றுகிறார்களா?... ஆச்சரியப்படுத்தும் ஆய்வு!


மகிழ்ச்சி

உலக அளவில் பணிபுரியும் தொழிலாளர்களில் இந்தியாவைச் சேர்ந்த அறிவுசார் பணியாளர்கள்தான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பது தற்போதைய புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.

பணியாளர்கள் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் சந்தோஷமாக இருக்கிறார்களா என்பது குறித்து சமீபத்தில் HP நிறுவனம் Work Relationship Index என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியது.

உலகம் முழுதும் உள்ள பணியாளர்கள் தங்கள் வேலை குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை முதன்மையாக வைத்தே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் உலகளவில் இந்தியாவைச் சேர்ந்த அறிவுசார் பணியாளர்கள்தான் மிகவும் மகிழ்ச்சியானவர்களாக இருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்விற்காக 12 நாடுகளைச் சேர்ந்த அலுவலக ஊழியர்கள், ஐ.டி ஊழியர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என 15,600 பேர்களிடம் தகவல்களைச் சேகரித்துள்ளனர். இதில் இந்தியாவிலிருந்து 1,300 பேர் பங்கெடுத்துள்ளனர். ஆய்வில் கலந்து கொண்ட பாதிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் பணியில் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார்கள். அதே சமயத்தில் உலகளவில் வெறும் 27 சதவீதம் பேர் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பணியிடங்களில் எது தங்களுக்கு மிகவும் முக்கியம் என்பதில் இந்திய பணியாளர்களிடத்தில் சில மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. வேலையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். நெகிழ்வுதன்மையுடன் கூடிய வேலை, நல்ல மனநிலை, நல்ல தலைமை, வேலைக்குத் தேவையான சரியான கருவிகள் ஆகியவற்றைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பணியிடம்

நிறைவாக உணர்தல், நல்ல தலைவர்கள், தனிப்பட்ட கவனம், சரியான திறன், சரியான கருவிகளைப் பயன்படுத்துதல், சிறப்பான பணியிடம் என இந்த ஆறு விஷயங்கள்தான் பணியாளர்களை மகிழ்ச்சிப்படுத்துவதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பணி சார்ந்த உறவுமுறைகள் இந்தியாவில் வேகமாக மாற்றமடைந்து வருகின்றன. கடந்த 2-3 ஆண்டுகளில் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதாகவும் பணியிடங்களில் சிறப்பான அனுபவம் கிடைத்தால் குறைவான சம்பளம் கிடைத்தாலும் எங்களுக்கு பிரச்சினையில்லை எனவும் இந்தியாவைச் சேர்ந்த 78 சதவீத அறிவுசார் பணியாளர்கள் கூறியுள்ளனர்.

தங்கள் உணர்வுகளை புரிந்துகொள்ளும் மேலாளர்கள் இருந்தால், குறைவான சம்பளம் கிடைத்தாலும் அவர்களின் கீழ் பணிபுரிய தயாராக இருப்பதாக பத்தில் ஒன்பது பணியாளர்கள் கூறியுள்ளனர். சிறந்த தலைவராக இருக்க வேண்டுமென்றால், ஊழியர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம் என 76 சதவீத தொழிலதிபர்கள் கூறியுள்ளனர்.

எனினும், தங்கள் நிறுவன தலைவர்கள் எங்களின் உணர்வுகளை, தேவைகளை சரியாக புரிந்துகொள்வதில்லை என 47 சதவீத ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

x