இந்தியாவில் எகிறும் கொரோனா.. ஒரே நாளில் 656 பேருக்கு பாதிப்பு; ஒருவர் பலி


கொரோனா பரிசோதனை

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் 656 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குளிர் மற்றும் மழைக்காலத்தில் வழக்கமான தொற்றுகள் பரவல் அதிகரிப்பதன் மத்தியில், ஓய்ந்திருந்த கொரோனாவும் தற்போது வேகம் பிடித்திருக்கிறது. உலகளாவிய நிலையில் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதன் வரிசையில், இந்தியாவில் அவை எதிரொலித்து வருகின்றன.

கொரோனா

ஞாயிறு காலை நிலவரப்படி முந்தைய 24 மணி நேரத்தில் மட்டும் 656 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியானார்.

அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 96 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 3,742 என்பதாக உயந்துள்ளது.

இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,33,333 என்பதாக உள்ளது. தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்றவர்களில் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 4,44,71,545 என்பதாக உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி சுமார் 220 கோடி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அடுத்தபடியாக, பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ள மாநிலங்களில் வழக்கமான தற்காப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக வயதில் மூத்தோர் மற்றும் இணை நோயாளிகள் மட்டும், முகக்கவசம் உள்ளிட்ட தடுப்பு அம்சங்களுடன் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா

ஒமைக்ரானின் ஜேஎன்.1 புதிய திரிபு வைரஸ் தற்போதைய கொரோனா வேகமெடுத்தலுக்கு காரணமாகி உள்ளது. சாதாரண அறிகுறிகளுடன் 3 முதல் 5 நாட்களுக்கு மூக்கடைப்பு, இருமல், காய்ச்சல் ஆகியவற்றுடன் பாதிப்பு அமையக்கூடும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதன் வாயிலாக, பாதிப்பிலிருந்து விரைவில் விடுபடலாம்.

x