அதிர்ச்சி... அடங்காத டெங்கு பரவல்... ஆபத்தில் 38 ஆயிரம் மக்கள்!


மருத்துவமனையில் டெங்கு நோயாளிகள்

மேற்கு வங்க மாநிலத்தில் டெங்கு பாதிப்பு 38 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக, மாநில சுகாதாரத்துறை அறிவித்ததை அடுத்து அம்மாநில மக்கள் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் டெங்கு காய்ச்சல் வெகுவேகமாக பரவி வருகிறது. பருவ மழையின் தொடக்கம் காரணமாக நாடு நெடுகவும் டெங்கு பரவல் தென்பட்டபோதும், மேற்கு வங்கத்தில் அவை அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருகின்றன.

டெங்கு கொசு

மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியில் பல இடங்களில் டெங்கு பரவல் கவலைக்குரியதாக மாறி வருகிறது. குறிப்பாக மால்டாவில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனிடையே வடக்கு மற்றும் தெற்கு வங்காளத்தில் டெங்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன.

நடப்பு நிலவரப்படி, மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 38,181 என்பதாக உயர்ந்துள்ளது. சுகாதார துறையின் அதிகாரபூர்வ தகவல் இது என்பதால், நிதர்சனத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக்கூடும். இதனூடே டெங்கு காய்ச்சலால் இறப்போர் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பலியானோரின் உண்மை தகவலை மாநில சுகாதாரத்துறை வெளியிட மறுத்து வருகிறது.

கொசுக்கடி

மாநிலத்தின் இதர பகுதிகளுக்கு நிகராக தலைநகர் கொல்கத்தாவிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, கொல்கத்தா மாநகராட்சி தனது சுகாதார மையங்களை வாரத்தின் 7 நாட்களிலும் இயக்க முடிவு செய்துள்ளது. மேலும், விடுப்பில் உள்ள சுகாதாரத்துறை ஊழியர்களை விரைந்து பணியில் சேருமாறு அறிவுறுத்தியதோடு, அடுத்த இரண்டு மாதங்களுக்கு அந்த ஊழியர்களுக்கான விடுமுறையை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது.

x