நாகூர் கடற்கரையில் தூய்மைப் பணி தன்னார்வலர்கள் செயலால் பொதுமக்கள் மகிழ்ச்சி


நாகை: குப்பைகள் நிரம்பியிருந்த நாகூர் கடற்கரையில் தன்னார்வலர்கள் தூய்மைப் பணி மேற்கொண்டதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கிழக்குக் கடற்கரை சூழலை பாதுகாக்கும் நோக்கில் கடற்கரை சுற்றுப் புறங்களை தூய்மை செய்யும் பணியை கிரீன் நீடா என்னும் சுற்றுச்சூழல் அமைப்பு முன்னெடுத்துள்ளது. 1076 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட தமிழக கடற்கரை பகுதிகளில் உள்ள 14 கடற்கரையோர மாவட்டங்களில் தூய்மைப் பணியை மேற்கொள்ள கிரீன் நீடா திட்டமிட்டுள்ளது. அந்தப் பணியின் தொடக்க விழா நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் சில்லடி கடற்கரையில் நேற்று காலை கிரீன் நீடா அமைப்பின் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.ஜோதிபாஸ் தலைமையில் நடைபெற்றது.

சேவை சித்திக் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், நாகப்பட்டினம் நகராட்சி தூய்மை பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், சுய உதவிக்குழு பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். கடற்கரையில் சிதறிக் கிடந்த பேப்பர், பாட்டில், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தனர்.

சேகரித்த கழிவுப் பொருட்களை நாகை நகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். நிகழ்வில் கடலோர காவல்துறை உதவி ஆய்வாளர் தமிழரசன், கிரீன் நீடா அமைப்பின் நிர்வாகிகள், சித்திக் சேவைக்குழும நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குப்பைகளால் நிரம்பியிருந்த கடற்கரை சுத்தமானதால் அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.