30 வயதுக்குட்பட்டவர்களிடையே இதய செயல் இழப்பு 40 சதவீதம் அதிகரிப்பு... ஆய்வறிக்கையில் அதிர்ச்சி!


மாரடைப்பு

கொரோனாவிற்குப் பிறகு 30 வயதுக்குட்பட்டவர்களிடையே இதய செயல் இழப்பு 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சிகரமான புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.

என்சிஆர்பி

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) 'இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள்' என்ற ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 2022-ம் ஆண்டில், 32,457 மாரடைப்பு சம்பவங்களில் 32,410 பேர் இறந்தனர்.

கடந்த 2018-ம் ஆண்டில், 25,764 மாரடைப்பு மரணங்கள் ஏற்பட்டுள்ளன. 30 வயதிற்குட்பட்டவர்களில், மாரடைப்பு மரணங்கள் 2018-ல் மொத்தம் 2,371 ஆகும். 2022-ம் ஆண்டு இது 3,329 ஆக அதிகரித்துள்ளது. 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் மாரடைப்பு இறப்புகள் 23,392-ல் இருந்து 29,081 ஆக அதிகரித்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

மாரடைப்பு

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் திடீர் மரணங்கள் 23 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை கூறுகிறது. இது 2018-ல் 46,003 ஆக இருந்து 2022-ம் ஆண்டு 56,653 ஆக அதிகரித்துள்ளது. 2022-ல், மொத்த விபத்து மரணங்களில் 13.4 சதவீதம் திடீர் மரணங்களாகும். இது விபத்து மரணங்களில் 46 சதவீதமாகும்.

2014-ம் ஆண்டிலிருந்து, நாட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் திடீர் இறப்பு வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 2012-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2022-ல் திடீர் இறப்பு வழக்குகள் இரட்டிப்பாகும்.

இந்த திடீர் மரணங்களில் மாரடைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. 2012-ம் ஆண்டிலிருந்து மாரடைப்பு இறப்புகளும் அதிகரித்துள்ளன. 2012-ல் 18,522 ஆக இருந்த மாரடைப்பு மரணங்கள் 2022-ம் ஆண்டில் 32,410 ஆக 75 சதவீதம் அதிகரித்துள்ளது.

மாரடைப்பு

2012-ம் ஆண்டு முதல் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக மாரடைப்பு மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைத் தவிர, கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாரடைப்பு மரணங்கள் அதிகம் நடந்த மாநிலம் கேரளா. கடந்த சில ஆண்டுகளில், இந்தியா முழுவதும் பதிவான மாரடைப்பு இறப்புகளில் பாதி இந்த இரண்டு மாநிலங்களில்தான் அதிகம் பதிவாகியுள்ளன.

கொரோனாவுக்குப் பிறகு திடீர் மரணங்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுபோன்ற மரணங்களுக்கான காரணத்தை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சமீபத்தில் மக்களவையில் தெரிவித்தது.

கோவிட் தடுப்பூசிக்கும் நாட்டில் மாரடைப்புக்கும் உள்ள தொடர்பு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்.பி சஜ்தா அகமது கேள்வி எழுப்பினார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (என்ஐஇ) ஆகியவை கோவிட்-19க்குப் பிறகு அதிகரித்து வரும் மாரடைப்பு வழக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டன.

மே-ஆகஸ்ட் 2023-ல் 19 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 47 மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் நடத்தப்பட்டது. இதில் 18-45 வயதிற்குட்பட்டவர்களுக்கு எந்தவிதமான நோய்களும் இல்லாத திடீர் மரணங்கள் பற்றிய ஆய்வாகும். கோவிட்-19 தடுப்பூசி, தொற்று, கோவிட்-19-க்கு பிந்தைய நிலைமைகள், குடும்ப சுகாதார நிலைமை, புகைபிடித்தல், போதைப்பொருள் பயன்பாடு, மது அருந்துதல், தீவிரமான உடல் உழைப்பு போன்றவை பற்றிய தகவல்களும் சேகரிக்கப்பட்டன.

கோவிட்-19 தடுப்பூசி திடீர் மரண அபாயத்தை அதிகரிக்கவில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வாழ்க்கை முறை, நடத்தைகள் திடீர் மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சொர்க்கவாசல் திறப்பில் அதிர்ச்சி... தலைகீழாக கவிழ்ந்த பெருமாள்!

x