கோடை மழையில் காய்த்துக் குலுங்கும் வாட்டர் ஆப்பிள்: விருதுநகர் விவசாயிகள் மகிழ்ச்சி


விருதுநகர்: விருதுநகரில் கோடை மழையால் சீசன் முடிந்தும், வாட்டார் ஆப்பிள் காய்த்துக் குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான அழகியநல்லூர், வரலொட்டி, மல்லாங்கிணர் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த பராமரிப்பில் மருத்துவ குணம் நிறைந்த ‘வாட்டர் ஆப்பிள்’ எனும் பன்னீர் நாவல் பழம் சுமார் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது சீசன் முடிந்தபின்னும் மாவட்டத்தில் பெய்த கோடை மழையால் விளைச்சல் அதிகரித்துள்ளது. தொடர்ந்து பெய்யும் சார் மற்றும் மழைத் தூரலால் தொடர்ந்து நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், சர்க்கரை நோயாளிகள் விரும்பும் பழமாக இருப்பதால் நல்ல விலையில் விற்கப் படுகின்றன. மருத்துவ குணம் நிறைந்த ‘வாட்டர் ஆப்பிள்’ என அழைக்கப்படும் பன்னீர் நாவல் பழம் குறைந்த பராமரிப்பில் வளரும் காட்டுத் தாவரம். இதன் பழங்களோடு இலைகளும் மருத்துவ குணமுடையதால் ஆயுர்வேதம் சித்தா மற்றும் யுனானி மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

இப்பழத்தில் இனிப்பு கலந்த துவர்ப்பு சுவை உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் விரும்பி வாங்குவதால் இதன் தேவை அதிகரித்துள்ளது. ஒரு மரத்திற்கு நாளொன்றுக்கு சுமார் 20 கிலோ வரை அறுவடை செய்யப்படுகிறது. தற்போது ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.100 வரை தரம் வாரியாக விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சதைப்பற்று நிறைந்த இப்பழத்தில் நீர்ச்சத்து, புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து ஆகிய உள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தியைத்தரும் வைட்டமின் சி,தெளிவான கண்பார்வைக்குரிய வைட்டமின் ஏ சீரான வளர்சிதை மாற்றத்திற்கு தேவையான வைட்டமின் பி-1 (தயமின்), வைட்டமின் பி-3 (நியாசின்) எலும்பு மற்றும் பற்கள் உறுதிக்கான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை உள்ளன.

இவை தவிர மெக்னீசியம் கந்தகச் சத்து இரும்புச் சத்தும உள்ளன.இவ்வளவு மருத்துவ குணம் நிறைந்த இப்பழங்கள் மாவட்டத்தில் பெய்த இதமான மழையால் தற்போது மீண்டும் காய்த்துக் குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.