ஓஹோ ஓவியம்... மலிவு கடையில் வாங்கிய விலை ரூ400... ஏலம் போனது ரூ1.5 கோடி!


‘ரமோனா’ ஓவியம்

இங்கிலாந்தில் ரூ400க்கு வாங்கப்பட்ட ஓவியம் ஒன்று, அதன் பொக்கிஷ பின்னணி காரணமாக தற்போது ரூ1.5 கோடிக்கு ஏலம் போயிருக்கிறது.

5 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தின் நியூ ஹாம்ப்ஷயர் நகரில் ஒரு மலிவு விலை பொருட்கள் கடையின், சேமிப்பில் இருந்த இந்த ஓவியம் பெண்மணி ஒருவரை வெகுவாய் கவர்ந்தது. அவர் வாங்க வந்த பொருள் வேறு. அது கிடைக்காத காரணத்தினால் அந்த கடையில் வலம் வந்து, குவிந்து கிடந்த பொருட்களை வேடிக்கை பார்த்தார்.

குப்பை போல குவிந்திருந்த பழைய பொருட்களை வாடிக்கையாளர் விரும்பிய விலையில் பேரம் பேசி வாங்கிக் கொள்ளலாம். வேடிக்கை பார்த்த பெண்ணுக்கு அங்கே குவிந்து கிடந்தவற்றில் ஒரு ஓவியம் மட்டுமே ஈர்த்தது. 4.99 அமெரிக்க டாலர் மதிப்பில் கடைக்காரர் கூறிய விலையில் பேரம் பேசாது அந்த ஓவியத்தை பெற்றுச் சென்றார்.

அத்துடன் அந்த ஓவியத்தை மறந்தும் போனார். பின்னொரு நாள் அவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்த புகைப்படம் பெருமளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. சுவரில் மாட்டப்பட்டிருந்த மலிவு விலை ஓவியத்தின் அருகே தான் நிற்கும் புகைப்படம் விவாதத்துக்கு ஆளானதில் அந்தப் பெண் குழம்பிப் போனார். அந்த ஃபேஸ்புக் பதிவுக்கு கிடைத்த மறுமொழிகளை அடுத்தே, ஓவியத்தின் பின்னணியை தாமதமாய் அறிந்தார்.

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் பிறந்து தனது ஓவியத் திறமையால் உலகளவில் கவனம் ஈர்த்த என்.சி.வைத் என்ற ஓவியர் வரைந்த ஓவியம் அது. ’ரமோனா’ என்ற தலைப்பிலான அந்த ஓவியத்தை விலைக்கு வாங்க ஆளாளுக்கு நச்சரிக்க, ஓவியத்தின் தற்போதைய உரிமையாளரான பெண்மணி அதனை ஏலம் விட முடிவு செய்தார்.

பிரபல போன்ஹாம்ஸ் ஏல நிறுவனம் இந்த ஓவியத்தைப் பற்றி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததும், அதனை விலைக்கு வாங்குவதற்கான போட்டி மேலும் எகிறியது. செப்டம்பர் 19 அன்று ஏலம் விடப்பட்டதில் இந்திய மதிப்பில் ரூ1.5 கோடிக்கு (அமெரிக்க டாலர் மதிப்பில் சுமார் 1,91,000) விற்றது. மலிவு விலை கடையில் சுமார் 5 டாலருக்கு அந்த ஓவியத்தை வாங்கியிருந்த பெண்மணி கிறுகிறுத்துப் போனார்.

ஓவியர் என்.சி.வைத்

நீதாமில் பிறந்த ஓவியக் கலைஞரான என்.சி.வைத், ஹெலன் ஹன்ட் ஜாக்சனின் 'ரமோனா' நாவலின் 1939 பதிப்பிற்காக தயாரித்த இந்த ஓவியம் ரமோனா என்றே பெயர் பெற்றது. பெற்றோரை இழந்து அபலையான இளம்பெண் ஒருத்தி, வளர்ப்புத் தாயுடனான நெருக்கடி வளர்ப்பின் தவிப்பை விளக்கும் ஓவியங்களில் ஒன்றாக அது அமைந்தது. செழிப்பான வண்ணங்கள், ஒளி மற்றும் நிழலின் நுட்பமான பயன்பாடு உள்ளிட்டவைக்காக ரமோனா ஓவியம் மதிப்புக்குரிய கலை பொக்கிஷமாக விளங்குகிறது.

x