உலகின் இரண்டாவது பன்றி இதய மாற்று அறுவை சிகிச்சை... சாவின் விளிம்பில் இருந்த அமெரிக்கர் உயிர் பிழைத்தார்!


மனிதருக்கு பன்றி இதயம்

அமெரிக்காவின் மேரிலாந்தில் உலகின் இரண்டாவது பன்றி இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. சாவின் விளிம்பில் தவித்த அமெரிக்கர், பன்றியின் இதயத்தோடு உயிர் பிழைத்திருக்கிறார்.

கடந்த வருடம் டேவிட் பென்னெட் என்பவருக்கு அமெரிக்காவின் மேரிலாந்து மருத்துவர்கள், பன்றியின் இதயத்தை பொருத்தி உயிர் பிழைக்கச் செய்தனர். தற்போது இரண்டாவது முறையாக, மற்றுமொரு அமெரிக்கருக்கு பன்றியின் இதயத்தை மாற்றியமைத்து அவரைக் காப்பாற்றி உள்ளனர்.

உலகின் முதலாவது பன்றி இதயத்தை பெற்ற டேவிட் பென்னெட், 2 மாதங்கள் மட்டுமே உயிரோடு இருந்தார். பன்றியின் இதயத்தில் பதுங்கியிருந்த வைரஸ் காரணமாக, அவருக்கான இதய மாற்று அறுவை சிகிச்சை முழு வெற்றி பெறாது போனது.

மனித இதயத்துக்கு பதில், மரபணு மாற்ற பன்றியின் இதயம்

உலகெங்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவைகள் அதிகரித்து வருவதன் மத்தியில், போதிய உறுப்புகள் கிடைப்பது சவாலாகி வருகிறது. அமெரிக்காவில் மட்டும் கடந்த ஓராண்டில் 4,100 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்திருக்கின்றன. ஆனபோதும் இதயங்களுக்கான தேவை நீடித்து வருகிறது.

இதனால் விலங்குகளின் உறுப்புகளை மனிதருக்கு பொருத்துவது தொடர்பான மருத்துவ ஆய்வுகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றன. அந்நிய திசுக்களுடன் மனித திசு உடன்படாது என்பதால், விலங்குகளின் உறுப்புகளை மனித உடலில் பொருத்தும் முயற்சிகள் பெருந்தோல்வி அடைந்தன. எனவே, மனித உடலுக்கு ஏற்ப மரபணு மாற்றம் செய்யப்பட்ட விலங்குகளின் உறுப்புகள் மூலம் இந்த சவாலை மருத்துவர்கள் தீர்க்க முயன்றனர்.

முதலாவது பன்றி இதய மாற்று அறுவை சிகிச்சையில், இவ்வாறு மரபணு மாற்ற பன்றி இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்ட போதும், வைரஸ் தொற்று காரணமாக 2 மாதங்கள் மட்டுமே பன்றி இதயத்தால் மனித உடலில் துடிக்க முடிந்தது. அதன் பின்னர் வைரஸ் தொற்றுக்கு எதிரான மருத்துவ ஆய்வுகள் முழுமையடைந்ததில், தற்போது இரண்டாவது பன்றி இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது.

58 வயதாகும் முன்னாள் கடற்படை வீரரான லாரன்ஸ் ஃபாசெட் என்பவர் இதய செயலிழப்பு காரணமாக மரணத்தை எதிர் நோக்கியிருந்தார். இவரது இதர உடல் உபாதைகள் காரணமாக வழக்கமான இதய மாற்று அறுவை சிகிச்சை சாத்தியப்படவில்லை. எனவே கடந்தாண்டு பன்றி இதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்ட அதே மேரிலாந்து மருத்துவர்கள் குழுவினர், இரண்டாவது அறுவை சிகிச்சையை இவரிடம் செய்திருக்கிறார்கள்.

அடுத்து வரும் சில வாரங்கள் லாரன்ஸ் ஃபாசெட்டுக்கு சவாலாக இருக்கலாம். தற்போது இயல்பாக மருத்துவர்களுடன் கைகுலுக்கி, ஜோக் அடித்து மகிழ்வுடன் இருக்கும் லாரன்ஸின் அதன் பிறகான இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் சாத்தியம், மருத்துவ வரலாற்றில் பெரும் சாதனையாக மாறக் காத்திருக்கிறது.

x